குஜராத் மாநிலத்தில் உள்ள அம்ரேலி மாவட்டத்தில் தனியாருக்கு சொந்தமான பண்ணை அமைந்துள்ளது. இந்த பண்ணையில் மத்திய பிரதேசத்தைச் சேர்ந்த வெவ்வேறு தம்பதியினர் வேலை பார்த்து வருகின்றனர். இவர்களது குழந்தைகள் ஒன்றாக விளையாடுவது வழக்கம். கடந்த சனிக்கிழமை தம்பதிகள் வேலை பார்த்துக் கொண்டிருந்தனர். அப்போது குழந்தைகள் கார் மீது அமர்ந்து விளையாடிக் கொண்டிருந்தனர். விளையாடும் ஆர்வத்தில் இரண்டு வயது முதல் 7 வயதுடைய குழந்தைகள் 4 பேர் காரின் கதவை திறந்து உள்ளே சென்றனர்.

அதன்பிறகு கார் கதவை திறக்க தெரியவில்லை. ஜன்னலையும் திறக்க தெரியவில்லை. இதனால் மூச்சு திணறி நான்கு பேரும் பரிதாபமாக உயிர் இழந்தனர். மாலை நேரம் கார் ஓட்டுநர் வந்து பார்த்து குழந்தைகள் இறந்து கிடந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தார். பெற்றோர் குழந்தைகள் வீட்டில் இருப்பார்கள் விளையாட சென்றிருப்பார்கள் என நினைத்து அலட்சியமாக இருந்தனர். இதுகுறித்து அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று குழந்தைகளின் உடலை மீட்டு அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது .