
இந்தியாவில் பொது விநியோகத் திட்டத்தின் கீழ் மாநிலம் முழுவதும் தகுதியுள்ள மக்களுக்கு ரேஷன் கார்டுகள் வழங்கப்பட்டு வருகிறது. இதன் மூலமாக மக்கள் பலரும் அருகில் உள்ள ரேஷன் கடைகள் மூலமாக இலவசமாகவும் மலிவு விலையிலும் உணவுப் பொருட்களை வாங்கி பயன்படுத்தி வருகின்றன. இந்தியாவில் கடந்த 2020 ஆம் ஆண்டு பரவிய கொரோனா பெருந்தொற்று காலத்தில் மக்களின் நலனை கருதி மத்திய அரசு கரீப் கல்யாண் அன்ன யோஜனா என்ற திட்டத்தை கொண்டு வந்தது.
இந்த திட்டம் மூலமாக இலவசமாக அரிசி மற்றும் கோதுமை உள்ளிட்ட உணவு தானியங்கள் வழங்கப்பட்டது. அதேசமயம் மாநில அரசுகள் உதவித்தொகை உள்ளிட்ட பல நலத்திட்டங்களை ரேஷன் கடைகள் மூலமாக பயனாளிகளுக்கு வழங்கின. நாடு முழுவதும் தற்போது 5.45 லட்சம் ரேஷன் கடைகள் இயங்கி வரும் நிலையில் இதன் மூலமாக 2023 ஆம் ஆண்டு ஜூன் மாத நிலவரப்படி சுமார் 80.10 கோடி மக்கள் பயனடைந்துள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.