தமிழக சட்டசபை கூட்டத்தொடரின் போது இன்று முதல்வர் ஸ்டாலின் அரசு ஊழியர்களுக்காக மொத்தம் 9 முக்கிய அறிவிப்புகளை வெளியிட்டார். அதன்படி அகவிலைப்படி உயர்வு 2 சதவீதம் வரை உயர்த்தப்படுவதாக அறிவித்தார். அதன் பிறகு ஈட்டிய விடுப்புக்கான பண பலன் சரண்டர் செய்த பிறகு இந்த வருடமே அக்டோபர் மாதம் முதல் வழங்கப்படும் என்று அறிவித்தார்.

அரசு ஊழியர்களுக்கு பண்டிகை காலம் முன்பணம் 10 ஆயிரம் ரூபாயிலிருந்து 20,000 ரூபாயாக அதிகரிக்கப்பட்டுள்ளது. இதேபோன்று திருமணம் முன்பணமும் 5 லட்சம் ரூபாயாக அதிகரிக்கப்பட்டுள்ளது. 3 வகையான ஓய்வூதியம் குறித்து ஆய்வு செய்ய அமைக்கப்பட்ட குழு செப்டம்பர் மாதம் அறிக்கை சமர்ப்பிக்கும். அதன்படி பழைய ஓய்வூதிய திட்டம், பங்களிப்பு ஓய்வூதிய திட்டம் மற்றும் ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டம் ஆகியவைகள் குறித்த ஆய்வு செய்து அறிக்கை சமர்ப்பிக்கப்படும்.

பொங்கல் பண்டிகைக்கான போனஸ் தொகை 500 ரூபாயிலிருந்து ஆயிரம் ரூபாயாக உயர்த்தப்படும். ஓய்வூதியதாரர்களுக்கு பண்டிகை காலம் முன்பணம் 5000 ரூபாயிலிருந்து 6000 ரூபாயாக உயர்த்தி வழங்கப்படும்.

மேலும் பெண் ஊழியர்களுக்கு மகப்பேறு விடுப்புகள் வழங்கப்பட்டாலும் அவை பதவி உயர்வுக்கான கணக்கில் எடுத்துக் கொள்ளப்படும். இந்த அறிவிப்புகளை சட்டப்பேரவையில் 110 விதியின் கீழ் முதல்வர் ஸ்டாலின் அறிவித்துள்ளார்.