தர்மபுரி மாவட்டத்தில் உள்ள சொக்காரப்பட்டி கிராமத்தில் 17 வயது சிறுவன் ஒருவன் பெற்றோருடன் வசித்து வருகிறான். இந்த சிறுவன் தொப்பூர் பகுதியில் உள்ள அரசு பள்ளியில் 12ஆம் வகுப்பு படித்து வருகிறான். இந்த மாணவன் கடந்த சில தினங்களுக்கு முன்பாக பள்ளிக்கு சென்ற நிலையில் திடீரென அனைத்து மாணவர்களும் முன்பாகவும் பூச்சி மருந்தை எடுத்து குடித்து விட்டான். உடனடியாக ஆசிரியர்கள் அந்த மாணவனை மீட்டு சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதித்தனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக தர்மபுரி அரசு மருத்துவமனையில் மாணவன் அனுமதிக்கப்பட்ட நிலையில் மருத்துவர்கள் மாணவனின் உயிரை காப்பாற்றினர்.

இது தொடர்பாக தொப்பூர் காவல் நிலையத்தில் புகார் கொடுக்கப்பட்ட நிலையில் அவர்கள் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள். அந்த மாணவன் பொது தேர்வுக்கு பயந்து விஷம் குடித்து தற்கொலை செய்ய முயற்சி செய்தாரா அல்லது ஆசிரியர் கண்டித்ததால் வேதனையில் விஷம் குடித்து தற்கொலைக்கு முயற்சி செய்தாரா போன்ற பல்வேறு கோணங்களில் விசாரணையை துரிதப்படுத்தியுள்ளனர். மேலும் இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.