
கேரள மாநிலத்தில் உள்ள பாலக்காட்டை சேர்ந்த நவநீதகிருஷ்ணன் தனது குடும்பத்தினருடன் கடந்த 2 நாட்களுக்கு முன்பு பழைய குற்றாலம் அருவியில் குளித்துக்கொண்டிருந்தார். இந்நிலையில் அருவி முன்பு இருக்கும் தடாகத்தில் குளித்துக் கொண்டிருந்த போது நவநீதகிருஷ்ணனின் மகள் ஹரிணி துவாரத்தின் வழியாக தண்ணீரில் இழுத்துச் செல்லப்பட்டார். பின்னர் சிறுமி 40 அடி பள்ளத்தில் விழுந்ததை பார்த்ததும் தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் பகுதியை சேர்ந்த டிரைவரான விஜயகுமார்(24) பள்ளத்தில் இறங்கி சிறுமியை பத்திரமாக மீட்டார்.
தனது உயிரையும் பொருட்படுத்தாமல் சிறுமியை காப்பாற்றிய வாலிபரை அனைவரும் பாராட்டி வருகின்றனர். மேலும் விளாத்திகுளம் தொகுதி எம்எல்ஏ மார்க்கண்டேயன் விஜயகுமாரை வீட்டிற்கு வரவழைத்து பாராட்டியுள்ளார். இதற்கிடையே விஜயகுமார் சிறுமியை காப்பாற்றிய வீடியோ சமூக வலைதளத்தில் வேகமாக பரவி வருகிறது.