நம்மை எதிர்ப்பவர்கள் எத்தனை கெட்டப் போட்டு வந்தாலும் களம் நமதே என்று தொண்டர்களுக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார். இது தொடர்பாக அவர் எழுதியுள்ள கடிதத்தில், தமிழகத்தில் 2026 ஆம் ஆண்டு நடைபெற உள்ள சட்டமன்ற தேர்தலில் மீண்டும் நாம் தாம் வெற்றி பெறுவோம். வெற்றியை அடைய நிர்வாக வசதிக்காக தான் மாவட்ட நிர்வாகத்தில் சில மாற்றங்கள் தொடங்கியுள்ளது. இது போன்ற இன்னும் சில அறிவிப்புகள் வரலாம். ஒரு பொறுப்பிலிருந்து ஒருவரை மாற்றுவது குறித்து ஒன்றுக்கு நூறு முறை யோசித்து கட்சியின் நன்மை கருதி தான் இறுதி முடிவு எடுப்பேன்.

இயக்கம் தேவைக்கேற்ற மாற்றங்களுடன் இயங்கினால் தான் காலத்திற்கு ஏற்ற வளர்ச்சியை பெற முடியும். முன்பு பொறுப்பில் இருந்து அனைவரும் தற்போது பொறுப்பில் இருக்கக்கூடியவர்களுக்கு ஒத்துழைப்பு வழங்கி ஒன்றாக இணைந்து பணியாற்ற வேண்டும். அதேபோல புதிதாக பொறுப்புக்கு வந்துள்ளவர்களும் ஏற்கனவே பொறுப்பில் உள்ளவர்களை அரவணைத்து செயலாற்ற வேண்டும். தமிழகத்தில் 200 தொகுதிகளில் இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டுள்ளதால் வெற்றிப்பாதையில் பயணிக்க இந்த மாற்றங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இது களை எடுப்பு என்று யாரும் நினைத்துக் கொள்ள வேண்டாம், இது ஒரு கட்டுமான சீரமைப்பு. அறிவாலயத்திலிருந்து செங்கலை உருவலாம் என கனவு காணலாமே தவிர ஒரு துகளை கூட எவராலும் அசைக்க முடியாது. சட்டப்பேரவை தேர்தலில் திமுக கூட்டணி வெற்றி பெறுவதை தடுக்க முடியாது என்பது அரசியல் எதிரிகள் அனைவருக்கும் நன்றாகவே தெரியும். எனவே நம்மை எதிர்ப்பவர்கள் எத்தனை கெட்டப் போட்டு வந்தாலும் களம் நமதே, கவனமாக உழைப்போம் வெற்றி நமதே என்று முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.