
தூத்துக்குடி மாவட்டம் இளம்புவனம் கிராமத்தை சேர்ந்தவர் அய்யனார். இவரது மனைவி காளியம்மாள் இந்த தம்பதிக்கு இரண்டு மகன்களும் ஒரு மகளும் உள்ளனர். இந்த நிலையில் கருத்து வேறுபாடு காரணமாக காளியம்மாள் தனது கணவரை பிரிந்து வாழ்கிறார். காளியம்மாளின் 17 வயது மகளுக்கும் பரமக்குடியைச் சேர்ந்த சந்தோஷ் என்பவருக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டு காதலாக மாறியது. இதனை அறிந்த குடும்பத்தினர் இரண்டு பேரையும் கண்டித்தனர். இதனால் கோபமடைந்த சந்தோஷ் காளியம்மாளுக்கு கொலை மிரட்டல் விடுத்துள்ளார்.
இது தொடர்பாக 2024-ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. அந்த புகாரின் பேரில் போலீசார் இரு தரப்பினரிடமும் சமரச பேச்சு வார்த்தை நடத்தி எழுதி வாங்கி பிரச்சினையை முடித்து வைத்தனர். அதன் பிறகும் சந்தோஷ் தொந்தரவு அளித்ததால் காளியம்மாள் தனது மகளை நம்பிபுரத்தில் இருக்கும் தனது தாய் வீட்டிற்கு அனுப்பி வைத்துள்ளார். கடந்த 23-ஆம் தேதி சிறுமியின் அலறல் சத்தம் கேட்டது. இதனால் அக்கம் பக்கத்தில் வீட்டிற்குள் சென்று பார்த்தனர். அப்போது உடல் முழுவதும் தீக்காயங்களுடன் சிறுமி உயிருக்கு போராடிக் கொண்டிருந்ததை கண்டு அதிர்ச்சியடைந்தனர்.
உடனடியாக சிறுமியை மீட்டு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். இதுகுறித்து போலீசார் நடத்திய விசாரணையில் அதிர்ச்சி தகவல் தெரியவந்தது. சம்பவம் நடந்த அன்று சந்தோஷும், அவரது நண்பர் முத்தையாவும் சிறுமியை பார்ப்பதற்காக சென்றுள்ளனர். அப்போது சிறுமி அவரிடம் பேசுவதற்கு மறுப்பு தெரிவித்தார். இதனால் கோபத்தில் சிறுமி மீது மண்ணெண்ணெய் ஊற்றி தீ வைத்து விட்டு இருவரும் தப்பி ஓடியது தெரியவந்தது. இதுகுறித்து சிறுமி அளித்த வாக்குமூலத்தின் அடிப்படையில் சந்தோஷையும், முத்தையாவையும் போலீசார் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.