
சென்னை மாவட்டம் கல்பாக்கம் பகுதியில் சேகர்-ஜெயலட்சுமி தம்பதியினர் வசித்து வருகின்றனர். இவர்களுக்கு இரண்டு குழந்தைகள் உள்ளனர். கடந்த 10 நாட்களுக்கு முன்பு இரண்டாவது மகள் லக்ஷனாவுடன் ஜெயலட்சுமி தனது தாய் வீட்டிற்கு வந்துள்ளார். கடந்த 14-ஆம் தேதி லக்ஷனாவுக்கு காய்ச்சல் ஏற்பட்டதால் பெத்திக்குப்பம் மேம்பாலம் அருகே இருக்கும் வர்மா கிளினிக்கிற்கு அழைத்து சென்றுள்ளனர். அப்போது டாக்டர் பிரனீத் வர்மா என்பவர் இரண்டு நாட்களுக்கு மூன்று மருந்துகள் எழுதி கொடுத்துள்ளார். மூன்று வேளைக்கும் 7.5 எம்எல் சிரப் கொடுக்க வேண்டும் என அந்த அட்டையில் எழுதிக் கொடுத்துள்ளார்.
இதனால் பெற்றோர் ஒரு நாள் முழுவதும் குழந்தைக்கு மருந்தை கொடுத்துள்ளனர். மறுநாள் காலை குழந்தை அசைவில்லாமல் கிடந்ததால் சென்னை ஸ்டான்லி மருத்துவமனைக்கு அவசர அவசரமாக அழைத்துச் சென்றனர். அங்கு குழந்தையை பரிசோதனை செய்து பார்த்தபோது அதிகளவு மருந்து கொடுத்ததால் குழந்தையின் கல்லீரல், குடல் போன்ற உடல் உறுப்புகள் பாதிக்கப்பட்டது தெரியவந்தது. தற்போது குழந்தைக்கு மாற்று மருந்து கொடுக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில் ஜெயலஷ்மி சம்பந்தப்பட்ட கிளினிக் மீது காவல் நிலையத்தில் புகார் அளித்தார். மேலும் உறவினர்களுடன் கிளினிக் முன்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டார். இது குறித்து அறிந்த போலீசார் சம்பவம் இடத்திற்கு சென்று அவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளனர். இதுகுறித்து மருத்துவர்கள் கூறும்போது, இரண்டு வயது குழந்தைக்கு காய்ச்சல் என்றால் 3 எம் எல் மருந்து மட்டுமே கொடுக்க வேண்டும். அதிக அளவு கொடுத்ததால் வயிற்றில் உள்ள அனைத்து பகுதிகளும் சேதம் ஆகிவிடும் என அறிவுறுத்தியுள்ளனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.