நெல்லை ரெயில் நிலையத்தில் சரக்கு இறக்கும் துறை உள்ளது. சரக்கு ரெயிலில் மூலம் கொண்டு வரப்படும் அரிசி, கோதுமை போன்ற பொருட்கள், இங்கிருந்து வாகனங்கள் வாயிலாக பல இடங்களுக்கு கொண்டுச் செல்லப்படுகிறது. இந்நிலையில் சரக்கு இறக்கும் துறையால் போக்குவரத்து நெரிசல் ஏற்படுவதால், இதை கங்கைகொண்டான் ரெயில் நிலையத்திற்கு இடமாற்றம் செய்துள்ளனர். இதில் நூறுக்கணக்கான தொழிலாளர்கள் பணியாற்றிய நிலையில், தங்களுக்கு கங்கைகொண்டான் சரக்கு இருக்கும் துறையில் வேலை வழங்க வேண்டும் என வலியுறுத்தினர். அதன்படி தொழிலாளர்களுக்கு வேலை வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வந்தது. இந்நிலையில் கங்கை கொண்டான் சரக்கு இறக்கும் துறையில் வேலை செய்யும் தொழிலாளர்கள் மற்றும் வாகன ஓட்டுனர்கள்
நெல்லை சரக்கு இறக்கும் துறை தொழிலாளர்களை இங்கே அனுமதிக்க கூடாது என வலியுறுத்தினர்.

இதுகுறித்து நேற்று ரயில் நிலையம் முன்பு நீதி கேட்டு திடீரென தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டதால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. இந்த போராட்டத்தில் பொருளாளர்கள், விவசாய சங்க தலைவர், ஊர் நாட்டாண்மை உட்பட பலர் கலந்து கொண்டனர்.
இதுகுறித்து அவர்கள் கூறும் போது, நெல்லை சரக்கு இறக்கும் துறை தொழிலாளர்களை இங்கே அனுமதித்தால் எங்கள் வாழ்வாதாரம் பாதிக்கப்படும். அதனை மீறி அனுமதித்தால் நாங்கள் எதிர்ப்பு போராட்டத்தில் ஈடுபடுவோம் என்று தெரிவித்தனர். இதைக்குறித்து தகவல் அறிந்த காவல்துறையினர் அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். மேலும் இந்த போராட்டத்தில் ஈடுபட்டவர்களுடன் வருவாய் ஆய்வாளர், தாசில்தார், கிராம நிர்வாக அலுவலர் ஆகியோர் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறார்கள்.