
கிருஷ்ணகிரி மாவட்டத்தைச் சேர்ந்த பிரபு(32) என்பவர் வைக்கோல் வியாபாரியாக இருக்கிறார். கடந்த 23ஆம் தேதி பிரபு ராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள பனப்பாக்கத்திற்கு வந்துள்ளார். அங்கு வைக்கோல் வாங்கி மற்ற தொழிலாளர்களுடன் சேர்ந்து லாரியில் ஏற்றி கொண்டிருந்தார். அந்த வழியாக சென்ற வாலிபர் அவசரமாக ஒருவரிடம் பேச வேண்டும் எனக் கூறி செல்போனை கேட்டார். இதனை நம்பி பிரபு செல்போனை கொடுத்தார். அந்த வாலிபர் யாரிடமோ பேசுவது போல நடித்து திடீரென அங்கிருந்து ஓடி விட்டார்.
இதனால் அதிர்ச்சியடைந்த பிரபு காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அந்த புகாரின் பேரில் வழக்குபதிவு செய்த போலீசார் அதே பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது சந்தேகப்படும்படியாக வந்த வாலிபரை பிடித்து விசாரித்த போது அவர்தான் பிரபுவிடம் செல்போனை திருடி சென்றது தெரியவந்தது. அவர் திருவள்ளூர் மாவட்டத்தைச் சேர்ந்த சுரேஷ். அவரை கைது செய்த போலீசார் செல்போனை பறிமுதல் செய்தனர்.