
திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள அரசு மருத்துவமனையில் 150-க்கும் மேற்பட்ட டாக்டர்கள் மற்றும் பயிற்சி டாக்டர்கள் வேலை பார்க்கின்றனர். இங்கு 500-க்கும் மேற்பட்ட உள் நோயாளிகளாக சிகிச்சை பெற்று வருகின்றனர். நேற்று முன்தினம் இரவு மருத்துவமனையில் உள்ள அவசர சிகிச்சை பிரிவில் டாக்டர் ஒருவருக்கு பணி ஒதுக்கப்பட்டது. அவர் அதிக மதுபோதையில் இருந்ததாக தெரிகிறது. இதனால் நோயாளிகளுடன் இருந்த உறவினர்களை ஒருமையில் பேசி திட்டி வெளியே அனுப்பியதோடு, போதை தலைக்கேறி மருத்துவமனை வெளியே இருக்கும் திண்ணையில் படுத்து தூங்கியுள்ளார்.
இதனை பார்த்து அதிர்ச்சியடைந்த ஊழியர்கள் அவரை உள்ளே செல்லுமாறு கூறினர். ஆனாலும் மது போதையில் இருந்த டாக்டர் ரகளையில் ஈடுபட்டார், இதனால் என்ன செய்வது என்று தெரியாமல் அவரை காவலாளிகள் தங்கும் அறையில் படுக்க வைத்தனர். காலை போதை தெளிந்ததும் டாக்டர் அங்கிருந்து புறப்பட்டு சென்றார். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த நிலையில் திருவள்ளூர் மருத்துவமனை டீன் ரேவதி சம்பந்தப்பட்ட டாக்டர் நல்லதம்பி மீது நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளித்துள்ளார்.