மேற்கு டெல்லியின் உத்தம் நகர் பகுதியில், வாங்கிய கடனை திருப்பிக்கொடுக்காததுடன், தொடர்ச்சியாக தொந்தரவு செய்த ஒருவரால் மனமுடைந்த இளம்பெண் ஒருவர் தற்கொலை செய்து கொண்டது பெரும் சோகத்தையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.

27 வயதான இளம்பெண், தாய், சகோதரிகளுடன் வசித்து வந்தார். கடந்த சனிக்கிழமை இரவு, அவரது சகோதரி வீடு திரும்பியபோது தங்கை தூக்கிட்டு உயிரிழந்ததை கண்டு அதிர்ச்சியடைந்து உடனடியாக போலீசாருக்கு தகவல் அளித்தார்.

போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை மேற்கொண்டனர். அப்போது, வீட்டின் சுவரில் ஒரு மொபைல் எண்ணும், அதன் அருகே “அவனை விடவேண்டாம்” என எழுதியிருந்ததும், தற்கொலைக்கான காரணங்களை விளக்கும் கடிதமும் காணப்பட்டது.

அந்த கடிதத்தில், தன் முன்னாள் சக ஊழியர் ஒருவர் தனது தாயின் மருத்துவச் செலவுக்காக 2 லட்சம் ரூபாய் கடனாக வாங்கியதாகவும், அதை திருப்பிக் கொடுக்காமல், கடந்த சில வாரங்களாக தொடர்ந்து தொந்தரவு செய்து வந்ததாகவும் எழுதியுள்ளார்.

சம்பந்தப்பட்ட நபர் இளம்பெண் தற்கொலைக்குப் பிறகு தனது குடும்பத்துடன் தலைமறைவாகி விட்டதாக கூறப்படுகிறது. அவரை கண்டுபிடிக்க போலீசார் தீவிரமாக விசாரணை நடத்தி வருகிறார்கள்.