கோவை பீளமேடு அருகே உள்ள நவ இந்தியா பகுதியில் இயங்கி வரும் பிரபல தனியார் மருத்துவமனையின் பராமெடிக்கல் சயின்ஸ் கல்லூரியில் ஏற்பட்ட துயரமான சம்பவம் அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

திருவண்ணாமலைையைச் சேர்ந்த 18 வயதான அனுபிரியா என்ற மாணவி, அந்தக் கல்லூரியில் முதலாம் ஆண்டு படித்து வந்தார். அவரும் பிற மாணவியரும் மருத்துவமனையின் 4-வது கட்டிடத்தில் பயிற்சி எடுத்து வந்த நிலையில், ஒரு மூன்றாம் ஆண்டு மாணவியின் பையில் இருந்த 1,500 ரூபாய் பணம் மாயமானது.

இது தொடர்பாக கண்காணிப்பு கேமரா காட்சிகளை பார்த்த பேராசிரியர்கள், அந்த அறையில் அனுபிரியா மட்டும் தனியாக இருந்ததை காரணமாகக் கூறி, அவரை சந்தேகத்தின் பேரில் விசாரித்தனர்.

முதல்வர் மற்றும் பேராசிரியர்கள் கூட்டாக ஐந்தாம் மாடியில் அனுபிரியாவை 2 மணி நேரத்துக்கும் மேல் விசாரித்தனர். அனுபிரியா எந்த தவறும் செய்யவில்லை என்றும், பணத்தை எடுக்கவில்லை என்றும் மறுத்தார்.

பிற மாணவிகள் விடுதிகளுக்கும் வீடுகளுக்கும் சென்றபோதும், அனுபிரியாவை அவர்கள் அனுமதிக்காமல் விசாரணை தொடர்ந்தது. மாலை 6.30 மணியளவில் அனுபிரியாவை வெளியேற சொல்லி அனுப்பினர்.

இதனால், அவமானம் மற்றும் மன உளைச்சலில் இருந்த அனுபிரியா, 4-ஆம் மாடிக்கு சென்று அங்கிருந்து கீழே குதித்து தற்கொலை செய்து கொண்டார்.

அனுபிரியாவின் தற்கொலை செய்தி பிற மாணவ மாணவிகளிடம் பரவியதும், அவர்கள் அந்த இடத்தை முற்றுகையிட்டு, பேராசிரியர்களை வெளியே செல்ல விடாமல் தடுத்து நிறுத்தினர். கல்வீச்சு சம்பவமும் ஏற்பட்டது.

கல்லூரி வளாகத்தில் சில கண்ணாடிகள் உடைந்தன. பின்னர், அனுபிரியாவின் உடல் பிரேத பரிசோதனைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டது.

திருவண்ணாமலையில் இருந்த அவரது தாய் வானதி, ஒரே மகளை இழந்த துக்கத்தில் கதறி அழுதார். இச்சம்பவம் தொடர்பாக பீளமேடு போலீசார் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.