
அவினாசியில் நாம் தமிழர் கட்சியின் ஆலோசனை கூட்டம் இன்று நடைபெற்றது. இந்த கூட்டத்தில் பங்கேற்ற பிறகு செய்தியாளர்களை சந்தித்து பேசிய நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், இந்தியா ஒரு தேசியம் அல்ல. அது பல தேசியங்களின் ஒன்றியம். பழமொழிகளை பேசக்கூடிய மக்களும் பல்வேறு இனங்களை சேர்ந்த மக்களும் வாழும் நாட்டில் ஒவ்வொரு மொழிக்கும் கலை, பண்பாடு மற்றும் கலாச்சாரம் என்பது வெவ்வேறாகத்தான் இருக்கும். அனைத்து மக்களின் மொழிக்கும் முன்னுரிமை வழங்கப்பட வேண்டும்.
மும்மொழிக் கொள்கையில் அப்படி என்ன இருக்கிறது? புதிய கல்விக் கொள்கை கட்டாயம் இந்தி மொழியை கற்க சொல்கிறது. கெடு வாய்ப்பாக வெள்ளைக்காரன் இந்தியாவை ஆண்டுவிட்டான். அதனால் தொடர்பு மொழியாக ஆங்கிலம் இருக்கின்றது. இந்தியை தாய் மொழியாக கொண்ட மாநிலங்களில் தமிழையும் சேர்த்துக் கொள்வார்களா. வரியை மட்டும் பெற்றுக்கொண்டு கடிதம் அனுப்பும்போது மட்டும் இந்தியில் அனுப்புகிறார்கள். அவ்வளவு ரோஷம் இருந்தால் எதற்கு தமிழகத்தின் வரியை பெறுகிறீர்கள்? கட்டாயம் இந்தியை படிக்க வேண்டும் என்பது கொஞ்சம் சரி கிடையாது என சீமான் காட்டமாக பேசியுள்ளார்.