விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள சீனிவாசபுரம் கிராமத்தில் விஸ்வலிங்கம் என்பவர் தனது தாய் முனியம்மாவுடன் வசித்து வருகிறார். விஸ்வலிங்கம்(29) கார் டிரைவராக வேலை பார்க்கிறார். அவருக்கு இன்னும் திருமணம் ஆகவில்லை. கடந்த 17-ஆம் தேதி விஸ்வலிங்கம் மார்பு கழுத்து, கன்னம், தோள்பட்டை உள்ளிட்ட உடல் உறுப்புகளில் ரத்த காயங்களுடன் இறந்து கிடந்தார். இதுகுறித்து அறிந்த போலீசார் விஸ்வலிங்கத்தின் உடலை மீட்டு அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.

இதுபற்றி போலீசார் விசாரணை நடத்தியதில் அதிர்ச்சி தகவல் தெரியவந்தது. விஸ்வலிங்கம் மேலதாளனூர் கிராமத்தைச் சேர்ந்த செல்வி என்ற பெண்ணுடன் நெருக்கமாக பழகியுள்ளார. இருவரும் திருமணம் செய்து கொள்ளாமல் கணவன் மனைவி போல வாழ்ந்து வந்தனர். இந்த நிலையில் மது குடிக்கும் பழக்கத்திற்கு அடிமையான விஸ்வலிங்கம் செல்வி மற்றும் முனியம்மாளிடம் அடிக்கடி தகராறு செய்துள்ளார். அவர்களை தகாத வார்த்தைகளால் திட்டி அடித்து துன்புறுத்தி உள்ளார்.

சம்பவம் நடைபெற்ற அன்று வீட்டிற்கு வந்த விஸ்வலிங்கம் வழக்கம் போல தனது தாய் மற்றும் காதலியுடன் தகராறு செய்தார். இதனால் அவர்கள் வயலுக்கு அடிக்க வைத்திருந்த பூச்சி மருந்தை தோசை மாவில் கலந்து தோசை சுட்டு விஸ்வலிங்கத்திடம் கொடுத்தனர். அதனை சாப்பிட்ட விஸ்வலிங்கம் வாயில் நுரை தள்ளியபடி இறந்தார். அதன் பிறகு உறவினர்கள் சிலருடன் ஏற்பட்ட தகராறு காரணமாக தான் விஸ்வலிங்கம் கொலை செய்யப்பட்டார் என போலீசாரை நம்ப வைப்பதற்காக செல்வியும் முனியம்மாளும் இணைந்து கத்தியால் அவரது உடலில் கிழித்தது தெரியவந்தது. இதனால் முனியம்மாள் மற்றும் செல்வி ஆகிய இருவரையும் போலீசார் கைது செய்தனர்.