
தென்காசி சொர்ண புரம் தெருவை சேர்ந்த மஸ்தான் என்பவர் இரண்டு கால்களும் செயல்படாத மாற்றுத்திறனாளி. இவர் ஒரு பர்னிச்சர் கடையில் தொழிலாளியாக வேலை பார்த்து வரும் நிலையில் இவருக்கு பாத்திமா என்ற மனைவியும் ஒரு மகன் மற்றும் மகளும் உள்ளனர். நேற்று காலை மஸ்தான் தென்காசி கிராம நிர்வாக அதிகாரி சுரேஷ் முன்னிலையில் சரணடைந்து தன்னுடைய மனைவியை கொலை செய்து விட்டதாக கூறியுள்ளார். இதனைத் தொடர்ந்து போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்த நிலையில் வீட்டில் பாத்திமா கை மற்றும் கால்கள் கட்டப்பட்ட நிலையில் பிணமாக கிடந்துள்ளார்.
இதனைத் தொடர்ந்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தியதில், பாத்திமாவின் நடத்தையில் நீண்ட நாட்களாக மஸ்தான் சந்தேகப்பட்டு உள்ளார். வேறு யாருடனும் அவருக்கு தொடர்பு இருப்பதாக எண்ணிய நிலையில் இருவருக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு மஸ்தான் தன்னுடைய மனைவிக்கு பரோட்டா வாங்கி கொடுத்துள்ளார். அந்த பரோட்டா குருமாவில் தூக்க மாத்திரைகளை அதிக அளவில் கலந்து கொடுத்ததாக கூறப்படுகிறது.
இதனால் சாப்பிட்ட உடன் பாத்திமா நன்றாக தூங்கிவிட்ட நிலையில் நள்ளிரவில் அவரின் கை கால்களை மஸ்தான் கட்டி உள்ளார். பிறகு சேலையால் தன்னுடைய மனைவியின் கழுத்தை இறுக்கி கொடூரமாக கொலை செய்துள்ளார். மேலும் விடியும் வரை தன்னுடைய மனைவி உடல் அருகில் அமர்ந்து உள்ளார். பிறகு கிராம நிர்வாக அதிகாரியிடம் சரண் அடைந்தார். இந்த சம்பவம் தொடர்பாக வழக்கு பதிவு செய்துள்ள போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.