
திருவண்ணாமலை மாவட்டம் சொக்கபாளையம் கிராமத்தில் தமிழரசன் என்பவர் வசித்து வருகிறார். இவர் விவசாயம் செய்து வருவதோடு பைனான்ஸும் செய்து வருகிறார். இவருக்கு அஜித் (23) என்ற மகன் இருந்துள்ளார். இவர் ஒரு தனியார் வங்கியில் ஊழியராக பணியாற்றி வரும் நிலையில் ராதிகா என்ற பெண்ணை காதலித்து வந்துள்ளார். இந்நிலையில் கடந்த 3-ம் தேதி தன்னுடைய காதலி ராதிகாவை அஜித் வீட்டிற்கு அழைத்து வந்தார். பின்னர் தமிழரசன் தன்னுடைய மகனுக்கும் ராதிகாவுக்கும் குலதெய்வம் கோவிலில் திருமணம் செய்து வைத்தார். இதைத்தொடர்ந்து கடந்த 5-ம் தேதி பதிவு திருமணம் செய்வதற்கு விசாரித்து வருவதாக கூறிவிட்டு அஜித் வீட்டிலிருந்து கிளம்பினார்.
ஆனால் அதன்பின் அஜித் வீட்டிற்கு திரும்பவில்லை. பின்னர் தன்னுடைய மகனை தமிழரசன் பல்வேறு இடங்களில் தேடியும் கிடைக்காததால் காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார். அந்த புகாரின் படி ஆரணி தாலுகா காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து காணாமல் போன வாலிபரை தேடி வந்தனர். இதற்கிடையில் வதியன் கொட்டாய் காட்டுப்பகுதியில் உள்ள ஒரு மரத்தில் வாலிபரின் சடலம் தொங்குவதாக காவல்துறையினருக்கு தகவல் கிடைத்தது. அந்த தகவலின் படி காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு சென்று பார்த்தனர். அப்போது தூக்கில் பிணமாக தொங்கியது காணாமல் போன அஜித் என்பது தெரிய வந்தது. இவர் தற்கொலை செய்து கொண்டார் என்பது தெரியவந்துள்ளது. மேலும் காதலியை கரம்பிடித்த 2 நாளில் வாலிபர் தற்கொலை செய்து கொண்டது பல்வேறு கேள்விகளை எழுப்பியுள்ள நிலையில் இது தொடர்பாக காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகிறார்கள்.