
சென்னையில் உள்ள அண்ணா பல்கலைக்கழகத்தில் மாணவி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட சம்பவத்திற்கு கண்டனம் தெரிவித்து பாஜக மகளிர் அணி சார்பில் போராட்டம் நடைபெற்ற போது அவர்களை கைது செய்த போலீஸ் ஆட்டு மந்தையில் அடைத்து வைத்ததாக சர்ச்சை வெடித்த நிலையில், நடிகை குஷ்புவும் தங்களை ஆட்டுமந்தையில் தான் அடைத்து வைத்ததாக குற்றச்சாட்டு தெரிவித்தார். இதற்கு தற்போது நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். இது பற்றி அவர் கூறியதாவது, அண்ணா பல்கலைக்கழகத்தில் மாணவி வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவத்தில் நீதி கேட்டு போராடும் எதிர்க்கட்சிகள் மீது திமுக அடக்கு முறையை செயல்படுத்துவது ஜனநாயகத்திற்கு விரோதமானது.
போராட்டங்களுக்கு அனுமதி மறுப்பது மற்றும் துண்டறிக்கைகள் கொடுத்தால் கூட அவர்களை கைது செய்வது என்ற திமுக அரசின் செயல்பாடுகள் மக்களாட்சிக்கு விரோதமாக இருக்கிறது. வள்ளுவர் கோட்டத்தில் கைது செய்த கட்சியினரிடம் கடுமையான முறையில் நடந்து கொண்டதும் மதுரையில் கைது செய்யப்பட்ட பாஜக பெண்களை ஆட்டு மந்தையில் அடைத்து வைத்ததும் ஏற்புடையது அல்ல. இது மாநில அரசின் மாண்புக்கே பெரும் இழுக்கு. கைது செய்து தூரமான இடங்களில் கொண்டு அடைகிறார்கள். அதோடு மதுரையில் வேறு இடமே இல்லாதது போல் ஆட்டு தொழுவத்தில் அடைத்து வைத்து இழிவான செயல்களை செய்கிறார்கள். இப்படி எதிர்க்கட்சிகளை மோசமான முறையில் கையாள்கிறார்கள். மேலும் இது திமுக அரசின் பாசிசப் போக்கையே காட்டுகிறது என்று கூறியுள்ளார்.