
ஈரோடு மாவட்டத்திலுள்ள ஊத்தங்காடு பகுதியில் ராஜேஸ்வரி(32) என்பவர் வசித்து வருகிறார். இவர் ஒரு பனியன் கம்பெனியில் டெய்லராக வேலை பார்க்கிறார். இவருக்கு பெருந்துறையைச் சேர்ந்த விஜயகுமார், விஸ்வநாதன் என்ற நண்பர்கள் இருக்கின்றனர். கடந்த எட்டாம் தேதி ராஜேஸ்வரி விஜயகுமாரையும் விஸ்வநாதனையும் தனது வீட்டிற்கு வரவழைத்து பேசிக் கொண்டிருந்தார். அப்போது திடீரென வந்த ராஜேஸ்வரியின் நண்பர்கள் இரண்டு பேர் விஜயகுமார் மற்றும் விஸ்வநாதனிடம் நாங்கள் சிபிசிஐடி அதிகாரிகள். நீங்கள் இரண்டு பேரும் ராஜேஸ்வரியுடன் கள்ளத்தொடர்பில் இருக்கிறீர்கள். இதை வெளியே பரப்பி விடுவோம்.
இந்த விஷயத்தை வெளியில் சொல்லாமல் இருக்க எங்களுக்கு பணம் தர வேண்டும் என மிரட்டியுள்ளனர். இதனால் அச்சத்தில் விஜயகுமாரும், விஸ்வநாதனும் 1 லட்சத்து 55 ஆயிரம் ரூபாய் வரை பணம் கொடுத்துள்ளனர். அதன் பிறகு இரண்டு பேரும் அங்கிருந்து சென்று விட்டனர். இந்த விவகாரம் குறித்து கடந்த 10-ஆம் தேதி விஜயகுமார் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அந்த புகாரின் பேரில் வழக்குபதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தினர். அப்போது ராஜேஸ்வரி தனது நண்பர்களுடன் இணைந்து இந்த மோசடி செயலில் ஈடுபட்டது உறுதியானது. இதனால் ராஜேஸ்வரியை போலீசார் கைது செய்தனர். தலைமறைவான அவரது நண்பர்களை தேடி வருகின்றனர்.