
இன்றைய காலகட்டத்தில் ஆதார் கார்டு என்பது மிக முக்கியமான அடையாள ஆவணமாக உள்ளது. இன்னும் சொல்லப்போனால் ஆதார் கார்டு இல்லாமல் இன்று எதுவுமே இல்லை என்ற சூழல் உருவாகிவிட்டது. அதனால் அனைத்து முக்கிய ஆவணங்களுடனும் ஆதார் கார்டை இணைக்க வேண்டும் என மத்திய அரசு தொடர்ந்து அறிவுறுத்தி வருகிறது. அதன்படி சமீபத்தில் ஆதார் அட்டையுடன் வாக்காளர் அட்டை இணைக்க வேண்டும் என அரசு அறிவுறுத்தியது.
இந்நிலையில் தமிழகத்தில் வாக்காளர் அட்டையுடன் ஆதார் எண்ணை இணைக்கும் பணி 70 சதவீதம் நிறைவடைந்துள்ளதாக தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்ய பிரதா சாகு தெரிவித்துள்ளார். 2024 ஆம் ஆண்டு மக்களவைத் தேர்தலுக்காக மின்னணு இயந்திரங்களை சரி பார்க்கும் முதல் கட்ட பணி ஜூலை நான்காம் தேதி தொடங்கப்படும் என கூறிய அவர், தேர்தலில் வாக்களிக்க ஆதார் அட்டையை வாக்காளர் அடையாள அட்டையுடன் இணைக்க வேண்டும் என்பது கட்டாயம் இல்லை என தெரிவித்துள்ளார்.