ஆந்திர மாநில துணை முதல்வரும் ஜனசேனா கட்சியின் தலைவருமான பவன் கல்யாண் கடந்த சில நாட்களாகவே தமிழகத்தில் பிரபலமான முருகன் கோவில்களுக்கு சென்று சாமி தரிசனம் செய்து வருகின்றார். அதன்படி நேற்று பழனி முருகன் கோவிலில் சாமி தரிசனம் செய்த பிறகு செய்தியாளர்களை சந்தித்து பேசிய அவர், தமிழ்நாட்டில் தான் மேற்கொண்டுள்ள ஆன்மீகப் பயணம் மிகவும் மன மகிழ்ச்சியை எனக்கு கொடுத்துள்ளது. தேசமும் தேச மக்களும் நன்றாக இருக்க வேண்டும் என்று நான் பழனி முருகனிடம் வேண்டிக் கொண்டுள்ளேன்.

பழனியில் இருந்து திருப்பதிக்கு தினமும் ரயில் சேவை வேண்டும் என்ற மக்கள் கோரிக்கையை மத்திய அரசிடம் கூறி விரைவில் நடவடிக்கை எடுப்பேன். அதேசமயம் பழனி மற்றும் திருப்பதி இடையே மீண்டும் பேருந்து சேவை தொடங்க விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும். ஆன்மீக ஸ்தலங்களில் அரசியல் குறித்து பேச வேண்டாம் என்று விரும்புகிறேன். பழனியில் திருப்பதி தரிசனம் தொடர்பான சேவைகளுக்கான டிக்கெட்டுகளை பதிவு செய்யும் வகையில் பழனியிலேயே தகவல் மையம் திறக்க உடனடி நடவடிக்கை எடுக்கப்படும் என்று பவன் கல்யாண் தெரிவித்துள்ளார்.