கோவை பீளமேட்டில் உள்ள சர்வதேச விமான நிலையத்தில் மத்திய தொழில் பாதுகாப்பு படை வீரரான ஆந்திர மாநிலத்தை சேர்ந்த சகர்தர் (34) என்பவர் பாதுகாப்பு பணியில் உள்ளார். நேற்று காலை இவர் கோவை விமான நிலையத்தில் இருந்து பயணிகள் வெளியேறும் வழியில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தார். அப்போது அவருடைய கையில் பாதுகாப்புக்காக ஏகே 47 துப்பாக்கி வைத்திருந்த நிலையில் திடீரென அவர் அங்கிருந்த கழிவறைக்குள் சென்றுள்ளார். உடனே கழிவறையில் இருந்து துப்பாக்கியால் சுடும் சத்தம் கேட்டது. இதனால் விமான நிலையத்தில் இருந்த பயணிகள் அலறி அடித்தனர்.

பிறகு மத்திய தொழில் பாதுகாப்பு படையினர் கழிவறையின் கதவை திறந்து பார்த்தபோது சகர்தர் துப்பாக்கியால் தனக்குத்தானே தலையில் சுட்டபடி ரத்த வெள்ளத்தில் கிடந்துள்ளார். உடனே அவரை மீட்டு மருத்துவமனைக்கு கொண்டு சென்ற நிலையில் செல்லும் வழியிலேயே உயிரிழந்தார். இதனை தொடர்ந்து நடத்தப்பட்ட விசாரணையில் அவர் ஆன்லைன் சூதாட்டத்தில் பணத்தை இழந்ததால் நீண்ட நாட்கள் ஆக மன உளைச்சலில் இருந்ததாகவும் இதனால் அவர் துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்து கொண்டதும் தெரிய வந்தது. இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.