
அம்பத்தூரில் ஆன்லைன் செயலி மூலம் பழகி இளைஞரின் வங்கி கணக்கில் இருந்த 57 ஆயிரம் ரூபாய் பணம் மற்றும் செல்போனை பறித்த நான்கு பேரை போலீசார் கைது செய்தனர். சென்னை அம்பத்தூர் பகுதியைச் சேர்ந்த வசந்தகுமார் என்பவர் அம்பத்தூர் எஸ்டேட் பகுதியில் உள்ள தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வருகிறார். ஓரினச்சேர்க்கையில் ஆர்வமான இவர் ஆன்லைன் செயலி மூலம் வினோத் என்ற இளைஞரை தொடர்பு கொண்டு ஓரினச்சேர்க்கைக்கு விருப்பம் தெரிவித்துள்ளார். இதை அடுத்து அம்பத்தூர் அருகே உள்ள காலி மைதானத்திற்கு வருமாறு வசந்தகுமாரை வினோத் அழைத்துள்ளார்.
அங்கு சென்ற வசந்தகுமாரை வினோத் மற்றும் அவரது நண்பர்களான வசந்த், ராஜா, சந்தோஷ் ஆகியோர் சேர்ந்து அடித்து உதைத்து வசந்தகுமாரிடம் இருந்த செல்போனை பரித்துள்ளனர். பின்னர் வங்கி கணக்கில் இருந்து 57 ஆயிரத்து 500 ரூபாயை தனது வங்கி கணக்கிற்கு வினோத் மாற்றியுள்ளார். பின்னர் வசந்தகுமாரின் செல்போனை பறித்துக் கொண்டனர். பின்னர் அதிர்ச்சி அடைந்த வசந்தகுமார் அம்பத்தூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதன் அடிப்படையில் போலீசார் வழக்கு பதிவு செய்து வினோத், வசந்த், ராஜா, சந்தோஷ் ஆகிய நான்கு பேரை கைது செய்தனர்.