
சென்னையில் பகுஜன் சமாஜ் கட்சியின் மாநில தலைவர் ஆம்ஸ்ட்ராங் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்திய நிலையில் இந்த கொலை வழக்கில் 30 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். குறிப்பாக கட்சிகளின் முக்கிய பிரமுகர்கள் கூட சிலர் சிக்கினார். இந்த வழக்கில் தொடர்புடைய ரவுடி திருவேங்கடம் மற்றும் ரவுடி சீசிங் ராஜா ஆகியோர் என்கவுண்டரில் சுட்டுக் கொல்லப்பட்டனர்.

இந்நிலையில் தற்போது ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் கைதான 30 பேர் மீது காவல்துறையினர் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்துள்ளனர். அதன்படி 5000 பக்கங்கள் கொண்ட குற்றப்பத்திரிக்கை எழும்பூர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இதில் 3 பேர் A1, A2, A3 குற்றவாளிகளாக வகைப்படுத்தப்பட்டுள்ளனர். அதன்படி முதல் எதிரியாக கொலைக்கு சிறையிலிருந்து திட்டமிட்ட நாகேந்திரன் a1 குற்றவாளியாகவும், தலைமறைவாக உள்ள ரவுடி சம்போ செந்தில் ஏ2 குற்றவாளியாகவும், அஸ்வத்தாமன் ஏ3 குற்றவாளியாகவும் சேர்க்கப்பட்டுள்ளனர்.