
சென்னையில் நேற்று இரவு பகுஜன் சமாஜ் கட்சியின் மாநில தலைவர் ஆம்ஸ்ட்ராங் மர்ம நபர்களால் படுகொலை செய்யப்பட்ட நிலையில் இந்த கொலை வழக்கில் 8 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்நிலையில் ஆம்ஸ்ட்ராங் கொலை செய்யப்பட்டதற்கான காரணம் குறித்து தற்போது பரபரப்பு தகவல்கள் வெளியாகியுள்ளது. இது தொடர்பாக காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டதாவது, ஆம்ஸ்ட்ராங் தினந்தோறும் இரவில் தன்னுடைய நண்பர்களுடன் பேசிக் கொண்டிருப்பார். அவர் குறிப்பாக அரசியல் நிலவரங்கள் பற்றி பேசும் நிலையில், நேற்று இரவு தன்னுடைய நண்பர்களுடன் வழக்கம்போல் பேசிக் கொண்டிருந்தார்.
அப்போது 3 இருசக்கர வாகனத்தில் வந்த 6 பேர் அவரை சரமாரியாக வெட்டி படுகொலை செய்துவிட்டு அங்கிருந்து தப்பி ஓடிவிட்டனர். அவர்களை பிடிக்க நண்பர்களும் கட்சியினரும் விரட்டி சென்ற நிலையில் அதற்குள் தப்பித்து ஓடிவிட்டனர். இதைத்தொடர்ந்து ஆம்ஸ்ட்ராங்கை மீட்டு ஒரு தனியார் மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர். ஆனால் அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் ஏற்கனவே அவர் இறந்து விட்டதாக கூறிவிட்டனர். அவருடைய உடல் சென்னை ராஜீவ்காந்தி மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பப்பட்டுள்ளது. இந்நிலையில் ஆம்ஸ்ட்ராங் வக்கீலுக்கு படித்துள்ளார். அவர் கடந்த 2000-ம் ஆண்டு தீவிர அரசியலில் இறங்கிய நிலையில் கடந்த 2006 ஆம் ஆண்டு மாநகராட்சி கவுன்சிலர் ஆனார். பின்னர் பல்வேறு வழக்குகளில் சிக்கிய அவர் கடும் சட்ட போராட்டத்திற்கு பிறகு வெளியே வந்தார்.
அவருக்கு எப்போதும் கொலை மிரட்டல்கள் வரும் நிலையில் முன்விரோதம் காரணமாகவே அவர் கொலை செய்யப்பட்டிருக்கலாம் என்று நினைக்கிறோம். கடந்த 2023 ஆம் ஆண்டு நடந்த ஒரு சம்பவத்திற்கு பழிவாங்கும் நோக்கில் இந்த கொலை நடந்திருக்கலாம். இது தொடர்பாக சிசிடிவி கேமராக்களை ஆய்வு செய்து விசாரித்து வருகிறோம். அவர் தன்னுடைய அகில இந்திய கட்சித் தலைவர் மாயாவதியை வைத்து சென்னையில் மாபெரும் பேரணி நடத்திய பிறகு தான் பிரபலமானார். அதன் பிறகு அவருக்கு எதிரிகளும் அதிகமாகிவிட்டனர் என்று கூறியுள்ளனர். மேலும் கடந்த வருடம் கொலை செய்யப்பட்ட ஆற்காடு சுரேஷின் தம்பி பாலு கொலை வழக்கில் கைது செய்யப்பட்டுள்ளதால் அவருடைய கொலைக்கு பழிவாங்கும் நோக்கில் இந்த கொலை நடந்திருக்கலாம் என்றும் கூறப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கதாகும்.