ஆளுநர் ஆர்என் ரவி தமிழக அரசு நிறைவேற்றும் மசோதாக்களை கிடப்பில் போடுவதாக தமிழக அரசு உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது. இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்த நிலையில் ஆளுநருக்கு அரசியலமைப்பில் எந்தவித தனி அதிகாரமும் கிடையாது என்றும், அவர் 10 மசோதாக்களை ஜனாதிபதிக்கு அனுப்பியது சட்ட விரோதம் என்றும் நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது.

அதன் பிறகு தங்களுடைய சிறப்பு அதிகாரத்தை பயன்படுத்தி 10 மசோதாக்களுக்கும் ஒப்புதல் வழங்குவதாக உச்ச நீதிமன்றம் தீர்ப்பு வழங்கிய நிலையில் ஆளுநர் 30 அல்லது 90 நாட்களுக்குள் கிடப்பில் போடப்பட்ட மசோதாக்கள் குறித்து நல்ல முடிவு எடுக்க வேண்டும் என்றும் அறிவுறுத்தினர்.

ஆளுநருக்கு எதிராக தமிழக அரசு தொடர்ந்த வழக்கில் சாதகமாக தீர்ப்பு வந்ததை தமிழக அரசியல் கட்சி தலைவர்கள் பலரும் வரவேற்கிறார்கள். இந்நிலையில் திமுக கட்சியின் அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ் பாரதி இந்த தீர்ப்பு குறித்து பேசியுள்ளார். அவர் ஆளுநருக்கு மட்டும் சுயமரியாதை இருந்தால் அவர் இன்று இரவே ராஜ்பவனை காலி செய்துவிட்டு செல்ல வேண்டும் என்று காட்டமாக கூறியுள்ளார்.

மேலும் இதேபோன்று தமிழக அரசியல் கட்சி தலைவர்களான செல்வப் பெருந்தகை மற்றும் திருமாவளவன் உள்ளிட்ட பலரும் இந்த தீர்ப்பை வரவேற்பதோடு ஆளுநர் பதவியில் இருந்து ரவியை நீக்க வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளனர்.