தெலுங்கானா மாநிலத்தின் ஐதராபாத் நகரில் ஜெர்மனியை சேர்ந்த 22 வயதான ஒரு  சுற்றுலா பயணி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கடந்த மாதம் 4ஆம் தேதி, அந்த இளம்பெண் மற்றோரு  சுற்றுலா பயணியுடன் ஐதராபாத்திற்கு வந்திருந்தார். கடந்த சில நாட்களாக சுற்றுப்பயணம் மேற்கொண்ட அவர்கள், நேற்று மமிடிபள்ளியில் உள்ள ஒரு நண்பரை சந்திக்க சென்றனர். அந்த இடத்திற்கு செல்லும் வழியில், ஒரு சுற்றுலா பயணி பாதியில் இறங்கிய நிலையில், அந்த ஜெர்மன் இளம்பெண் டாக்சியில் தனியாக பயணித்துள்ளார்.

மாலை 7.30 மணியளவில், மமிடிபள்ளி அருகே அமைந்திருந்த ஆள்நடமாட்டமற்ற பகுதிக்கு டாக்சி டிரைவர் காரை ஓட்டி சென்றுள்ளார். அந்த இடம் புகைப்படங்கள் எடுக்க உகந்தது என கூறி, அவர் பெண் சுற்றுலா பயணியை ஏமாற்றி அப்பகுதிக்கு அழைத்துச் சென்றார். பிறகு, காரை நிறுத்திய டிரைவர், அங்கு அந்த இளம்பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்தார். இந்த செயலைத் தொடர்ந்து, அதிர்ச்சியடைந்த இளம்பெண் கூச்சலிடத் தொடங்கிய நிலையில், குற்றவாளி அங்கிருந்து தப்பிச் சென்றார்.

பின்னர், பாதிக்கப்பட்ட இளம்பெண் நிகழ்ந்த சம்பவத்தை தனது நண்பரிடம் தெரிவித்ததையடுத்து, போலீசில் புகார் அளித்தார். அவரின் புகாரின் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்த போலீசார், விரைந்து செயல்பட்டு டாக்சி டிரைவரை கைது செய்தனர். தற்போது அவரிடம் தீவிர விசாரணை நடைபெற்று வருகின்றது. இந்த சம்பவம் வெளிநாட்டு சுற்றுலா பயணிகளின் பாதுகாப்பு குறித்து மீண்டும் கேள்விகளை எழுப்பியுள்ளது.