
தமிழக முதல்வர் ஸ்டாலின் இன்று தன்னுடைய 72-வது பிறந்த நாளை கொண்டாடுகிறார். முதல்வர் ஸ்டாலின் திமுகவின் தலைவராக பொறுப்பேற்ற பிறகு அவர் போட்டியிட்ட அனைத்து தேர்தல்களிலும் வெற்றி தான். திமுக தலைவர் ஆக பொறுப்பேற்ற பிறகு எதிர்கொண்ட முதல் சட்டமன்ற தேர்தலில் ஸ்டாலின் வெற்றி பெற்று முதல்வரானார். அவர் இன்று தன்னுடைய 72 ஆவது பிறந்த நாளை கொண்டாடும் நிலையில் தமிழக அரசியல் கட்சி தலைவர்கள் பலரும் அவருக்கு வாழ்த்துக்களை தெரிவித்து வருகிறார்கள். அந்த வகையில் பிரதமர் நரேந்திர மோடி முதல்வர் ஸ்டாலினுக்கு பிறந்தநாள் வாழ்த்து சொன்ன நிலையில் தற்போது ஆளுநர் ரவியும் பிறந்தநாள் வாழ்த்து கூறியுள்ளார்.
ஆளுநர் ரவி பிறந்தநாள் வாழ்த்து கூறுவதற்காக தமிழில் கடிதம் எழுதியதோடு அவர் தமிழில் கையெழுத்தும் போட்டுள்ளார். இது தொடர்பாக வெளியிட்டுள்ள கடிதத்தில் தாங்கள் இன்று தங்களுடைய 72 வது பிறந்த நாளை கொண்டாடுவதை அறிந்து மிகவும் மகிழ்ச்சி அடைகிறேன். தங்களுடைய தலைமையின் கீழ் தமிழ்நாட்டு மக்கள் எல்லா நலன்களையும் பெற்று மகிழ்ச்சியுடன் வாழ வாழ்த்துகிறேன். எல்லாம் வல்ல இறைவன் அருளால் தாங்கள் பூரண உடல் ஆரோக்கியத்துடனும் சந்தோஷத்துடனும் தமிழ்நாட்டு மக்களுக்கு சேவை ஆற்றிடவும் இந்த நாளில் தங்களை வாழ்த்துகிறேன் என்று பதிவிட்டுள்ளார்.
அதோடு ஆர்.என் ரவி என்று அவர் தமிழில் கையெழுத்து போட்டுள்ளார். தமிழ்நாட்டில் தற்போது மும்மொழி கல்விக் கொள்கை தொடர்பாக பிரச்சனை இருக்கும் நிலையில் ஆளுநர் ரவி தமிழில் கையெழுத்து போட்டு வாழ்த்தியது கவனத்தைஈர்த்துள்ளது. மேலும் தமிழக அரசுக்கும் ஆளுநருக்கு இடையே மோதல் போக்கு என்பது நீடித்து வரும் நிலையில் இது தொடர்பாக உச்சநீதிமன்றத்தில் கூட வழக்கு நடைபெறுகிறது. இந்த நிலையில் முதல்வருக்காக ஆளுநர் தமிழில் கையெழுத்து போட்டு வாழ்த்து சொன்னது பேசும் பொருளாக மாறியுள்ளது.