
தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநாடு வருகிற 27ஆம் தேதி விக்கிரவாண்டியில் உள்ள விசாலை என்ற இடத்தில் நடைபெறும் நிலையில் தற்போது மாநாட்டுக்கான பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. முதல் மாநாட்டில் பல்வேறு பிரபலங்கள் கலந்து கொள்வார்கள் என்று எதிர்பார்க்கப்படும் நிலையில் ரசிகர்கள் மற்றும் தொண்டர்களும் கலந்து கொள்வார்கள். இதனால் முதல் மாநாட்டில் கூட்டம் அலைமோதும். அதோடு மாநாட்டுக்கு வருபவர்கள் பார்க்கிங் செய்வதற்கு வசதியாகவும் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அதன்பிறகு சட்டரீதியான பிரச்சினைகளை எதிர்கொள்வதற்காக தமிழகம் முழுவதும் 234 தொகுதிகளிலும் தற்காலிக வழக்கறிஞர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.
பொதுவாக நடிகர் விஜய் எந்த ஒரு நிகழ்ச்சியில் கலந்து கொண்டாலும் அதிகபட்சமாக 5 நிமிடங்களுக்கு மேல் பேச மாட்டார். அளவோடு பேசி சொல்ல வந்த கருத்தை சுருக்கமாக முடித்து விடுவார். ஆனால் தற்போது நடிகர் விஜய் மணிக்கணக்கில் முதல் மாநாட்டில் பேசுவார் என்று ஒரு தகவல் வெளிவந்துள்ளது. அதாவது தவெக முதல் மாநாட்டில் விஜய் 2 மணி நேரம் வரை பேசுவார் என்று தற்போது ஒரு புதிய தகவல் வெளிவந்துள்ளது. இந்த மாநாட்டில் தமிழக வெற்றி கழகத்தின் கொள்கைகள் வெளியிடப்படும். அதோடு அரசியலுக்கு வந்ததன் நோக்கம் மக்களுக்காக மேற்கொள்ளப்படும் பணிகள் என்று பல்வேறு அறிவிப்புகளை வெளியிட இருக்கிறார்கள்.
இந்த முதல் மாநாடு நடிகர் விஜயின் ரசிகர்கள் மற்றும் தமிழக வெற்றி கழகத்தின் தொண்டர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பினை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் மாநாடு மாலை 4 மணிக்கு தொடங்கும் நிலையில் விஜய் 6 மணியளவில் உரையாற்றுவார் என்று தகவல் வெளிவந்துள்ளது. இந்த மாநாடு நடைபெறுவதை முன்னிட்டு அந்த மாநாட்டு திடலில் நிரந்தரமாக 100 அடி உயர கொடிக்கம்பமும் நிறுவப்பட உள்ளது. மேலும் இந்த 100 அடி உயரக் கொடி கம்பத்தில் நடிகர் விஜய் கொடியேற்றிய பிறகு மேடைக்கு வருவார் என்றும் அதன் பின் கட்சியின் கொள்கைகளை பிரகடனப்படுத்தி 2 மணி நேரம் வரை உரையாற்றுவார் என்றும் கூறப்படுகிறது.