
பாகிஸ்தான் முன்னாள் வேகப்பந்து வீச்சாளராக விளங்கிய முகமது அமீர், தற்போது இங்கிலாந்தில் தங்கி விளையாடி வருகிறார். பாகிஸ்தான் தேசிய அணியில் இருந்து ஓய்வுபெற்ற அவர், இங்கிலாந்து குடியுரிமை பெறும் முயற்சியில் ஈடுபட்டு வருகிறார். இது சாத்தியமானால், அடுத்த ஆண்டு ஐபிஎல் தொடரில் விளையாடும் வாய்ப்பு கிடைக்கும் என அவர் நம்பிக்கை தெரிவித்துள்ளார். “எனக்கு வாய்ப்பு கிடைத்தால், நான் வெளிப்படையாக சொல்கிறேன் – நிச்சயமாக ஐபிஎல்-ல் விளையாடுவேன்” என அவர் தெரிவித்தார்.
அதே நேரத்தில், பிஎஸ்எல் மற்றும் ஐபிஎல் ஆகிய இரு லீக்களும் ஒரே நேரத்தில் நடைபெறாத பட்சத்தில், எந்த லீக் முதலில் அவரைத் தேர்ந்தெடுக்கின்றதோ, அதிலேயே விளையாடுவேன் என்றும் கூறியுள்ளார். “முதலில் ஐபிஎல் ஏலத்தில் தேர்வானால், பிஎஸ்எல் தொடரில் விளையாட மாட்டேன். ஏனெனில் நான் பிஎஸ்எல்-ஐ விட்டு வெளியேறினால் எதிர்காலத்தில் அந்த லீக்கில் மீண்டும் விளையாட முடியாது” என அமீர் விளக்கினார்.
இந்நிலையில், பஹல்காம் பயங்கரவாத தாக்குதலுக்குப் பிறகு இந்தியா மற்றும் பாகிஸ்தானுக்கு இடையிலான உறவுகள் மீண்டும் தீவிரமாக பாதிக்கப்பட்டுள்ளன. மத்திய அரசு, இந்தியாவில் உள்ள பாகிஸ்தான் குடிமக்கள் 48 மணி நேரத்தில் நாடு விட்டு செல்ல வேண்டும் என அறிவித்துள்ளதுடன், பாகிஸ்தான் நாட்டு வீரர்கள் மீதான எதிர்வினையும் அதிகரித்துள்ளது. எனவே, முகமது அமீர் இங்கிலாந்து குடியுரிமை பெற்றாலும், அவரது பாகிஸ்தான் பின்னணி காரணமாக ஐபிஎல் வாய்ப்பு சாத்தியமா? என்ற கேள்வி எழுகிறது. இதனால், அவரின் கனவு நிறைவேற வாய்ப்பு குறைவதாகவே கிரிக்கெட் வல்லுநர்கள் மதிப்பீடு செய்கின்றனர்.