திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள வேடசந்தூர் அருகே தென்னம்பட்டியில் பைரவன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு பார்வதி என்ற மனைவி இருந்துள்ளார். இந்த தம்பதியினருக்கு இரண்டு குழந்தைகள் இருக்கின்றனர் இவர்கள்  எலப்பார்பட்டியைச் சேர்ந்த தங்கமயில் என்பவருக்கு சொந்தமான தோட்டத்து வீட்டில் வாடகைக்கு குடியிருந்து வருகின்றனர்.

இந்த நிலையில் தென்னம்பட்டி அருகே இருக்கும் மணல் பிளான்ட்க்கு தங்கமயில் வாடகைக்கு டிராக்டரில் தண்ணீர் வினியோகம் செய்து வருகிறார். அதே மணல் பிளாண்ட்டில் எலப்பார்பட்டியைச் சேர்ந்த கனகராஜ் என்பவரும் டிராக்டரில் தண்ணீர் வினியோகம் செய்கிறார். இந்த நிலையில் தங்க மயிலுக்கும் கனகராஜுக்கும் இடையே தொழில் போட்டி காரணமாக நேற்று தகராறு ஏற்பட்டுள்ளது.

இதனால் கனகராஜ் தரப்பினர் தங்கமயிலை தேடி தென்னம்பட்டியில் இருக்கும் அவரது தோட்டத்து வீட்டிற்கு சென்றனர். அந்த வீட்டில் வாடகைக்கு குடியிருக்கும் பார்வதி மட்டும் தனியாக இருந்துள்ளார். உடனே கனகராஜ் தரப்பினர் வீட்டிற்கு வெளியே இருந்த பொருட்களை அடித்து நொறுக்கினர். இதனை பார்வதி தட்டி கேட்டுள்ளார். மேலும் தங்கமயிலை செல்போன் மூலம் தொடர்பு கொண்டு நடந்த விஷயத்தை கூறியுள்ளார்.

இதனால் கோபமடைந்த அந்த கும்பல் பார்வதியை அரிவாளால் சரமாரியாக வெட்டி விட்டு அங்கிருந்து தப்பி சென்றனர். இதில் படுகாயமடைந்த பார்வதி பரிதாபமாக உயிரிழந்தார். இது குறித்து அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று பார்வதியின் உடலை மீட்டு அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும் இது குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து கொலையாளிகளை தேடி வருகின்றனர்.