அரியானா மாநிலம் சோனிபட்டில் தினேஷ் என்பவருக்கு ஏற்பட்ட சிக்கலான ஒரு நிலை தற்போது மருத்துவ உலகில் மிகப்பெரிய அசாதாரண மருத்துவ சாதனையாகப் பார்க்கப்படுகிறது. அக்டோபர் 16-ஆம் தேதி ஒரு சண்டையின்போது, தினேஷின் இதயத்தில் கத்தி குத்தப்பட்டது. அந்த கத்தியின் கைப்பிடி உடைந்து விட்டதால், அதனை உடனடியாக வெளியே எடுக்க முடியாத நிலை உருவானது. இதனால் தினேஷ் 6 நாட்கள் வலியால் துடித்தார்.

தினேஷின் உயிரைக் காப்பாற்றும் நோக்கத்தில் மருத்துவர்கள் அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கத் தீர்மானித்தனர். மருத்துவ பரிசோதனையின் மூலம், கத்தி முழுவதுமாக இதயத்தில் சிக்கியிருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இத்தகைய சூழ்நிலையில், கத்தியை திடீரென அகற்றினால் அதிகமான ரத்தப்போக்கு ஏற்பட்டு, நோயாளி உயிரிழக்க வாய்ப்புள்ளதால், சரியான முறையில் அறுவை சிகிச்சை செய்வது அத்தியாவசியமாக இருந்தது.

அக்டோபர் 22ஆம் தேதி, மருத்துவர் குழு ஆர்வலர்கள், சிக்கலான இதய அறுவை சிகிச்சை மூலம், தினேஷின் இதயத்திலிருந்து கத்தியை வெற்றிகரமாக அகற்றினர். இதற்காக, முதலில் இதயத்தின் அருகிலுள்ள சவ்வை திறந்து, கத்தியை கவனமாக அகற்றி, வலது ஏட்ரியல் அறையை சரிசெய்தனர். மேலும், அவரது நுரையீரலுக்கும் பூரண சிகிச்சை அளிக்கப்பட்டது. மூன்று முதல் நான்கு மணி நேரம் நீடித்த இந்த அறுவை சிகிச்சை மிகவும் சிக்கலானதாக இருந்தாலும், மருத்துவர் குழுவின் திறமையால் அது வெற்றிகரமாக முடிந்தது. இதயத்தில் கத்தியுடன் 6 நாட்கள் துடித்த தினேஷ், தற்போது சிகிச்சைக்கு பின்பு உடல் நலம் பெற்று வருகிறார்.