மதுரை மாவட்டத்தில் அழகு முருகன் என்பவர் வசித்து வருகிறார். இவர் கட்டிட பணியாளராக இருக்கிறார். இந்நிலையில் இவரது மகன் படித்து முடித்த பள்ளியின் தலைமை ஆசிரியர் மற்றும் முதுகலை பொருளியல் ஆசிரியர் ஆகிய 2 பேரும் பள்ளியின் கட்டட மராமத்து வேலையை பாக்க கூறினர். இதையடுத்து அவர் 3 நாட்கள் அந்த பள்ளியில் வேலை பார்த்துள்ளார். அதன் பின் அதற்கான சம்பளத்தை பள்ளியின் தலைமை ஆசிரியர் வழங்கியுள்ளார். அதற்கு அவர் அந்த பணத்தை வாங்காமல் பள்ளிக்காக நான் செய்த உதவியாக இருக்கட்டும் என்று கூறியுள்ளார்.

இதுகுறித்து அவர் கூறியதாவது, எனது மகன் இந்த பள்ளியில் 12-ம் வகுப்பு படித்து முடித்து, பின்னர் திண்டுக்கல்லில் உள்ள நிகர்நிலை பல்கலைக்கழகத்தில் பி ஏ படித்து வருகிறார். எனது மகனின் கல்வி வளர்ச்சிக்கு உதவியாக இருந்த இந்த பள்ளிக்கு உதவ நினைத்தேன். அதனால் சம்பளம் வாங்காமல் இந்த வேலையை பார்த்தேன் என்றார்.  இதேபோன்று ஆசிரியர் முருகேசன் கூறியதாவது, 12-ம் வகுப்பு படித்த மாணவன் பீமன் விடுமுறை நாட்களில் பள்ளிக்கு வந்து பூச்செடிகள், மரங்கள் ஆகியவை நட்டு வைத்தார். இதையறிந்த தனியார் நிறுவனம் அவருடைய உயர்கல்விக்கு ரூ.25 ஆயிரம் வழங்கியுள்ளது என்றார்.