நாடாளுமன்றத்தில் இன்று பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்ட நிலையில் வேளாண்மை, கல்வி, தொழில்துறை போன்ற பல்வேறு துறைகளுக்கு நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. அதன் பிறகு பீகார் மற்றும் ஆந்திர மாநிலங்களுக்கு ஏராளமான அளவில் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. அதேசமயம் தமிழ்நாடு என்ற பெயரைக் கூட பட்ஜெட்டில் குறிப்பிடவில்லை. இதனால் தமிழக அரசியல் கட்சி தலைவர்கள் பலரும் பாஜக மீது கடும் கோபத்தில் இருக்கிறார்கள்.

அதாவது இந்த முறை நாடாளுமன்ற தேர்தலில் பாஜக பெரும்பான்மையுடன் ஆட்சி அமைக்க தேவையான இடங்களில் வெற்றி பெறாத நிலையில் ஐக்கிய ஜனதா தளம் மற்றும் தெலுங்கு தேசம் கட்சியின் ஆதரவுடன் ஆட்சி அமைத்தது. இதன் காரணமாகத்தான் ஆந்திரா மற்றும் பீகார் மாநிலங்களுக்கு நிதி தாராளமான அளவுக்கு ஒதுக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இந்நிலையில் நடிகர் பிரகாஷ்ராஜ் தற்போது பட்ஜெட் குறித்து தன்னுடைய கருத்தினை x பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அதில் இது ஆந்திரா மற்றும் பீகார் மாநிலங்களுக்கான பட்ஜெட் ஆகும். எனவே மற்ற மாநிலங்கள் மகிழ்ச்சியாக அல்வா சாப்பிடுங்கள் என்று பதிவிட்டுள்ளார். மேலும் அவருடைய பதிவுக்கு பலரும் தங்கள் கருத்துக்களை தெரிவித்து வருகிறார்கள்.