ஜம்மு & காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் ஏப்ரல் 22-ஆம் தேதி நடந்த பயங்கரவாத தாக்குதலில் 27 பேர் உயிரிழந்த சம்பவம், இந்தியா முழுவதும் அதிர்ச்சியையும் ஆவேசத்தையும் கிளப்பிய நிலையில், தற்போது பாகிஸ்தானைச் சேர்ந்த பயங்கரவாத அமைப்பு லஷ்கர்-எ-தொய்பா-வின் துணைத் தலைவர் சைஃபுல்லா கஸூரி, பதற்றம் மிகுந்த நிலையில் ஒரு வீடியோ பதிவை வெளியிட்டுள்ளார். இதில், அந்த அமைப்பிற்கு இதில் எந்தவிதமான தொடர்பும் இல்லை என உருக்கமாக விளக்கம் அளித்துள்ளார்.

இந்த வீடியோவில், கண்ணீருடன் கஸூரி, “இந்த தாக்குதலுக்கு பாகிஸ்தானுக்கு எந்தவித சம்பந்தமும் இல்லை. இதை இந்தியா தன்னைத்தானே திட்டமிட்டிருக்கிறது” என கூறியுள்ளார். மேலும், இந்தியா தற்போது சிந்துப் நதி நீர்பகிர்வு ஒப்பந்தத்தை ரத்து செய்துள்ளது, பாகிஸ்தானைச் சேர்ந்தவர்களை நாடு கடத்துகிறது என்றும் குற்றம்சாட்டியுள்ளார். “இந்தியா யுத்தத்திற்குத் தயாராகி வருகிறது; அது அமைதியை விரோதமாக பார்க்கிறது” எனவும் அவர் கூறினார்.

 

இந்தியா, காஷ்மீரில் 10 லட்சம் ராணுவ வீரர்களை குவித்து, அங்கு யுத்த சூழல் உருவாக்கியுள்ளதாக சைஃபுல்லா தனது வீடியோவில் கூறியுள்ளார். “இந்தியாவை ஆதரிக்க வேண்டாம்… உங்கள் கண்களைத் திறந்துவிட்டு உண்மையை பாருங்கள். இந்த தாக்குதல் பாகிஸ்தானால் செய்யப்படவில்லை. இது முழுவதுமாக இந்தியாவின் உத்தேசத்தால் நிகழ்ந்த நாடகம்” என்று கூறிய அவர், உலக நாடுகளுக்கு ‘இந்தியாவின் உருவாக்கிய போலி பின்னணியை’ எதிர்த்து நிலைநிறுத்துமாறு வலியுறுத்தியுள்ளார்.

இந்திய ஊடகங்கள் தொடர்ந்து 24 மணி நேரமாக இந்த தாக்குதலுக்குப் பாகிஸ்தானைத் தான் பொறுப்பாக்கி வருகிறது. இதனால் ஏற்பட்ட அழுத்தம் காரணமாகவே சைஃபுல்லா கஸூரி இந்த வீடியோ விளக்கத்துக்கு வந்திருக்கிறார் என விமர்சகர்கள் கருதுகிறார்கள். ஆனால் இந்திய அரசும், ஊடகங்களும் இந்த தாக்குதல் பாகிஸ்தானின் ஆதரவுடன் செயல்பட்ட பயங்கரவாதிகளால் நடத்தப்பட்டது என உறுதியாகக் கூறிவருகிறது. இதன் பின்னணியில் பாகிஸ்தானின் பயங்கரவாத ஆதரிப்பு செயல்பாடுகள் மீண்டும் சர்வதேச கவனத்தை ஈர்க்கின்றன.