
தமிழகத்தில் நேற்று 24 மணி நேரத்தில் அடுத்தடுத்து 4 படுகொலை சம்பவங்கள் நடந்தது பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்திய நிலையில் அரசியல் கட்சி தலைவர்கள் பலரும் அதற்கு கண்டனங்களை தெரிவித்து வருகிறார்கள். அந்த வகையில் தேமுதிக கட்சியின் பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் கண்டனம் தெரிவித்து ஒரு அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில், தர்மபுரி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் எதிரே உள்ள பிரியாணி கடையில் வாலிபர் ஒருவர் படுகொலை செய்யப்பட்ட நிலையில், சிவகங்கையில் பாஜக கட்சியின் பிரமுகர் செல்வகுமாரை மர்ம நபர்கள் படுகொலை செய்துள்ளனர்.
இதேபோன்று கடலூரில் அதிமுக கட்சியின் நிர்வாகி பத்மநாதனும், குமரியில் காங்கிரஸ் கட்சி கவுன்சிலரின் கணவரும் வெட்டி படுகொலை செய்யப்பட்டுள்ளனர். இதை பார்க்கும்போது தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சீர்குலைந்து விட்டதும் கொலைகள் சர்வ சாதாரணமாக நடக்கிறது என்பதும் தெளிவாக தெரிகிறது. இதற்கு போதைப்பொருட்கள் புழக்கமும் ஒரு காரணம். அதன்பிறகு ரவுடிகளுக்கு அவர்கள் மொழியில் சொன்னால் தான் புரியும். ஆனால் அதற்காக இன்று வரை எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கவில்லை. மேலும் தமிழ்நாடு கொலை நாடாக மாறாமல் இருப்பதற்கான அனைத்து நடவடிக்கைகளையும் உடனடியாக எடுக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.