
டெல்லியில் சட்டசபை தேர்தல் நடந்து முடிந்த நிலையில் இன்று காலை முதல் வாக்கு எண்ணிக்கை விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. தொடக்கம் முதலே பாஜக முன்னிலை வகித்து வரும் நிலையில் ஆம் ஆத்மி கட்சி பின்னடைவை சந்தித்துள்ளது. அதே நேரத்தில் காங்கிரஸ் ஒரு தொகுதியில் மட்டும் தான் முன்னிலையில் இருக்கிறது. கிட்டத்தட்ட 27 வருடங்களுக்கு பிறகு பாஜக டெல்லியில் ஆட்சி அமைக்கும் நிலை உருவாகியுள்ளது. கடந்த சட்டசபை தேர்தலில் 62 தொகுதிகளில் வெற்றி பெற்று அசைக்க முடியாத சக்தியாக உருவான ஆம் ஆத்மி தோல்வியை சந்தித்து வருவது இந்தியா கூட்டணி மத்தியில் கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளதாக திருமாவளவன் கூறியுள்ளார்.
இது பற்றி செய்தியாளர்கள் சந்திப்பில் அவர் கூறியதாவது, டெல்லி தேர்தலில் பாஜக வெற்றி பெற்றால் அது தேசத்திற்கே பெரும் பின்னடைவு. ஆம் ஆத்மி தோல்வியை சந்திக்கும் என்றும் இவ்வளவு பின்னடைவை சந்திக்கும் என்றும் நான் கொஞ்சம் கூட எதிர்பார்க்கவில்லை. நாடாளுமன்ற தேர்தலில் மட்டும் இன்றி சட்டசபை தேர்தல்களிலும் இனி இந்தியா கூட்டணி தலைவர்கள் கவனம் செலுத்த வேண்டும். டெல்லி சட்டசபை தேர்தலில் காங்கிரஸ் மற்றும் ஆம் ஆத்மி கட்சி இணைந்து ஒற்றுமையாக போட்டுயிட்டு இருக்கலாம். இதில் இந்தியா கூட்டணி தலைவர்கள் கவனம் செலுத்த வேண்டும் என்று விடுதலை சிறுத்தைகள் கட்சியின் சார்பாக கோரிக்கை விடுத்துக் கொள்கிறேன் என்று கூறியுள்ளார்