
திருச்சி மாவட்ட எஸ்பி ஆக வருண்குமார் ஐபிஎஸ் பணியாற்றி வருகிறார். இவருடைய மனைவி வந்திதா பாண்டே. இவர் புதுக்கோட்டை மாவட்ட எஸ்பி ஆவார். இவர்கள் இருவருக்கும் எதிராக சமீப காலமாக சமூக வலைதளங்களில் அவதூறு கருத்துகள் பரவி வருகிறது. இதன் காரணமாக தற்போது வருண் குமார் மற்றும் அவருடைய மனைவி வந்திதா பாண்டே ஆகிய இருவரும் எக்ஸ் வலைதளத்திலிருந்து தற்காலிகமாக விலகுவதாக அறிவித்துள்ளனர். இதுகுறித்து வருண்குமார் ஐபிஎஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில், நான் வருண்குமார் வீரசேகரன் ஐபிஎஸ். நான் பல் மருத்துவதற்கான படிப்பை முடித்துள்ளேன். இருப்பினும் ஐபிஎஸ் பணி மீது உள்ள பற்றின் காரணமாக இந்த பணியை தேர்ந்தெடுத்தேன்.
கடந்த 2010 ஆம் ஆண்டு யுபிஎஸ்சி தேர்வு எழுதி தேர்ச்சி பெற்ற நிலையில் கடந்த 2011 ஆம் ஆண்டு ஐபிஎஸ் தேர்வாகி உதவி காவல் கண்காணிப்பாளராக பணிபுரிந்தேன். பின்னர் காவல் கண்காணிப்பாளராக பதவி உயர்வு பெற்று பல்வேறு இடங்களில் பணிபுரிந்தேன். தற்போது ஒரு வருடமாக திருச்சி மாவட்ட எஸ்பி ஆக பணியாற்றி வரும் நிலையில் என்னுடைய 13 வருட பணி காலத்தில் இதுவரை என்னுடைய உயர் அதிகாரிகளிடமிருந்து outstanding rating பெற்றுள்ளேன். என்னுடைய தகப்பனார் வழி தாத்தா ஒரு தபால்காரர் ஆவார். என்னுடைய தாய் வழி தாத்தா ஒரு விவசாயி. இப்படிப்பட்ட சாதாரண குடும்பத்தில் இருந்து வந்த நான் சாமானியர்களின் பிரச்சனைகளை தீர்க்க வேண்டும் என்று பணியாற்றி வருகிறேன்.
கடந்த 2021 ஆம் ஆண்டு யூடியூபர் ஒருவர் அரசியல் கட்சி பின்புலத்துடன் அவதூறு பரப்பிய நிலையில் அவரை கைது செய்து குண்டர் சட்டத்தில் அடைத்துன். தற்போது அதே யூடியூபர் பதிவு செய்த சச்சையான கருத்துக்களால் சைபர் கிரைம் காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டு கைது செய்யப்பட்டார். அந்த youtube சார்ந்த கட்சியின் ஒருங்கிணைப்பாளர் (சீமான்) என்னை பத்திரிக்கையாளர்கள் சந்திப்பின்போது அவதூறாக பேசியுள்ளார். அந்தக் கட்சி ஒருங்கிணைப்பாளருக்கு நான் வக்கீல் நோட்டீஸ் அனுப்பினேன். நான் சட்டப்படி நோட்டீஸ் அனுப்பிய ஒரே ஒரு காரணத்திற்காக என்னையும் என் குடும்பத்தினரையும் பற்றி ஆபாசமான மற்றும் அவதூறான செய்திகள் பரப்புகிறார்கள்.
குழந்தைகள் மற்றும் என் குடும்ப பெண்கள் 3 பேரின் புகைப்படங்களை ஆபாசமாக சித்தரித்து வெளியிட்டுள்ளனர். இது ஒரு கட்டத்தில் என் குடும்பத்தினருக்கு கொலை மிரட்டல் விடும் அச்சுறுத்தலாக மாறியுள்ளது. நான் சவாலான பணிகளில் நேர்மையாக பணியாற்றினால் பகையை சந்திக்க கூடும் என்பது தெரிந்ததுதான். பொது வாழ்வில் இருக்கும் எங்களுக்கு இது ஒரு சாதாரண விஷயம் தான். நாங்கள் காவல்துறையில் உயர் பதவியில் இருந்தாலும் நாங்களும் சாதாரணமான மனிதர்கள் தான். மேலும் இந்த விஷயம் என் குடும்பத்தினரை பாதித்த காரணங்களால் நானும் என்னுடைய மனைவியும் தற்காலிகமாக சமூக வலைதளங்களில் இருந்து விலகு கிறோம். இது பயத்தினால் அல்ல என்று தெரிவித்துள்ளார்.