விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல் திருமாவளவன் நேற்று செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அவர் பேசியதாவது, பாஜக மற்றும் ஆர்எஸ்எஸ் போன்றவர்கள் ஒவ்வொரு தேர்தலிலும் அவர்கள் இங்கு ஒரு அரசியல் கட்சியாக வலிமைப்படுத்துவதற்கான வேலைகளில் ஈடுபடுவார்கள். அவர்கள் தேர்தலில் வெற்றி பெற வேண்டும் என்று நினைப்பதை விட தமிழ்நாட்டில் நிலையாக உள்ள பெரியார் மற்றும் சமூக நீதி அரசியலை நீர்த்துப் போக செய்ய வேண்டும் என்பதைத்தான் குறிக்கோளாக கொண்டுள்ளனர். குறிப்பாக ஏதேனும் ஒரு திராவிட கட்சியை பலவீனப்படுத்தி இங்கு காலூன்ற வேண்டும் என்று நினைக்கிறார்கள்.

இதைத் தொடர்ந்து மற்றொரு திராவிட கட்சியையும் அழிக்க வேண்டும் என்பதுதான் அவர்கள் நோக்கம். திமுக மற்றும் அதிமுக உள்ளிட்ட அரசியல் கட்சிகளை வலுவிழக்க வேண்டும் என்று அவர்கள் நினைப்பதை விட சமூக நீதி அரசியலை வலுவிழக்க செய்ய வேண்டும் என்று நினைக்கிறார்கள். இதுதான் அவர்களின் உண்மையான உள்நோக்கம். ஆனால் இவற்றையெல்லாம் அறிந்தும் ஒரு மிகப்பெரிய வரலாற்றுப் பிழையாக அதிமுக அவர்களுடன் கூட்டணி அமைத்துள்ளது.

கடந்த சட்டமன்றத் தேர்தலில் அதிமுக மிகப்பெரிய தோல்வியை சந்தித்த நிலையிலும் பாஜகவுடன் மீண்டும் கூட்டணி அமைத்துள்ளது கண்டிப்பாக மிகப்பெரிய ஆபத்தை ஏற்படுத்தும். இதை அறிந்தும் இப்படி ஒரு ஆபத்தான முடிவை அதிமுக எடுத்திருப்பது அதிர்ச்சி அளிக்கிறது. இது அதிமுகவுக்கு பின்னடைவை ஏற்படுத்தும் என்பதை தாண்டி பாஜகவின் வாக்கு வங்கி பலப்பட அவர்களே உதவி செய்கிறார்கள்.

எனவே பாஜகவுடன் கூட்டணி அமைத்தது தொடர்பாக மீண்டும் அவர்கள் மறுபரிசீலனை செய்ய வேண்டும். இந்த வரலாற்றுப் பிழையை கண்டிப்பாக திருத்திக் கொள்ள வேண்டுமென்று அதிமுகவுக்கு விடுதலை சிறுத்தைகள் கட்சியின் சார்பில் கேட்டுக்கொள்கிறேன். மேலும் முதல்வர் ஸ்டாலின் கருத்தை நாங்கள் முறையாக முழுவதுமாக ஏற்றுக்கொள்கிறோம் என்றார்.