உத்திரபிரதேச மாநிலத்தில் உள்ள பிரயாக்ராஜ் பகுதியில் கடந்த மாதம் 13ஆம் தேதி மகா கும்பமேளா தொடங்கிய நிலையில் மொத்தம் 45 நாட்கள் நடைபெறும் இந்த நிகழ்ச்சி இந்த மாதம் 26 ஆம் தேதியோடு நிறைவடைகிறது. இதுவரை மகா கும்ப மேளாவில் கோடிக்கணக்கான பக்தர்கள் புனித நீராடியுள்ள நிலையில் இன்னும் ஏராளமான பக்தர்கள் செல்கிறார்கள். சமீபத்தில் மகா கும்பமேளாவில் பெண்கள் குளிக்கும் வீடியோவை ஆன்லைனில் விற்பனை செய்வதாக சர்ச்சை எழுந்த நிலையில் இது தொடர்பாக போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்நிலையில் இந்த நிகழ்ச்சியில் டிஜிட்டல் நீராடுவதற்கு ஒரு கும்பல் பணம் வசூலிக்கும் சம்பவம் தற்போது பெரும் அதிர்ச்சிகரமாக அமைந்துள்ளது.

அதாவது மகா கும்பமேளாவுக்கு நேரில் வர முடியாதவர்கள் தங்களுடைய போட்டோவை அனுப்பி அதை கும்பமேளா நடைபெறும் இடத்தில் நீரில் நனைக்குமாறு கூறுகிறார்கள். இதற்கு 1100 ரூபாய் வரையில் கட்டணம் வசூலிக்கப்படுவதாக கூறப்படுகிறது. இது தொடர்பாக வைரலாகும் வீடியோவில் திருவேணி சங்கமத்தில் குளிக்க முடியாதவர்கள் போட்டோவை அனுப்பினால் அதை நனைத்து எடுப்போம் புண்ணியம் கிடைக்கும் இதற்கு பணம் அனுப்புங்கள் என்று கூறுகிறார். மேலும் இது தொடர்பான வீடியோ சமூக வலைதளத்தில் வைரலாகி வரும் நிலையில் சிலர் இதனை மோசடி எனவும் சிலர் இது மூடநம்பிக்கையின் உச்சம் என்றும் விமர்சித்து வருகிறார்கள்.