ராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணத்தை அடுத்த அம்மனூர் கிராமத்தில் சரவணன் என்பவர் வாழ்ந்து வருகிறார். இவர் அரக்கோணத்தில் உள்ள அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளிக்கு எதிரே ஜோசப் என்பவரின் வீட்டை வாடகைக்கு எடுத்து ஹோட்டல் நடத்த முடிவு செய்தார்.

இதனையடுத்து வீட்டு மின் இணைப்பாக இருந்ததை வணிக மின் இணைப்பாக மாற்றுவதற்காக விண்ணப்பித்துள்ளார். அப்போது உதவி செயற்பொறியாளர் புனிதா உதவியாளர்களை அழைத்துக் கொண்டு சரவணன் ஹோட்டல் ஆரம்பிக்கும் இடத்திற்கு வந்துள்ளார்.

வீட்டு மின் இணைப்பை வணிக மின் இணைப்பாக மாற்றி தருவதற்காக 1 லட்சம் லஞ்சம் தர வேண்டும் என புனிதா கேட்டுள்ளார். அதனால் முன்பணமாக 50,000 ரூபாய் பணத்தை பெற்றுக் கொண்டார். மேலும் 50 ஆயிரம் தர வேண்டும் என சரவணனை வற்புறுத்தியுள்ளார். இதனால் சரவணன் லஞ்ச ஒழிப்பு துறையினரிடம் புகார் அளித்தார்.

இதனையடுத்து லஞ்ச ஒழிப்புப் போலீசாரின் அறிவுரைப்படி ரசாயனம் தடவிய 25 ரூபாய் பணத்தை சரவணன் புனிதாவிடம் கொடுத்துள்ளார். அப்போது அங்கு மறைந்திருந்த லஞ்ச ஒழிப்பு போலீசார் புனிதாவை சுற்றி வளைத்தனர்.

மேலும் அவருக்கு உதவியாக இருந்த வணிக ஆய்வாளர் மோனிகா, போர்மேன் பேகம் ஆகிய இருவரையும் கைது செய்தனர். இவர்கள் மூவர் மீதும் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.