தமிழகத்தில் எதிர்க்கட்சிகள் நடத்தும் கூட்டத்தை நோக்கத்தை திசை திருப்புவதற்காக பாஜக செய்யும் தந்திரம் தான் அமலாக்கத்துறை சோதனை என்று முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.பெங்களூரில் நடைபெறும் எதிர்க்கட்சிகள் கூட்டத்தில் பங்கேற்பதற்காக முதல்வர் ஸ்டாலின் நேற்று சென்னையில் இருந்து புறப்பட்டார். அப்போது சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்து பேசிய முதல்வர் ஸ்டாலின், மோடி தலைமையிலான பாஜக ஆட்சியை வீழ்த்துவதற்காக பெங்களூரில் எதிர்க்கட்சி கூட்டம் நடைபெறுகிறது.

எதிர்க்கட்சிகள் தொடர்ந்து ஒன்று கூடுவது பாஜக ஆட்சிக்கு எரிச்சலை ஏற்படுத்தி உள்ளது. அதன் வெளிப்பாடு தான் இந்த அமலாக்கத்துறை சோதனை. ஆனால் அதைப்பற்றி திமுக சிறிதும் கவலைப்படவில்லை. லோக்சபா தேர்தலில் இதற்கு மக்கள் நிச்சயம் பதில் சொல்வார்கள். அதற்கு தயாராக உள்ளனர். இதுதான் உண்மை. பல மாநிலங்களில் நடைபெற உள்ள எதிர்க்கட்சிகள் கூட்டத்தின் நோக்கத்தை திசை திருப்பும் தந்திரம் தான் இந்த அமலாக்கத்துறை சோதனை. இதனை சந்திப்பதற்கு நாங்கள் தயாராக உள்ளோம். தமிழகத்தில் தேர்தல் பிரச்சாரத்தை எங்களுக்காக கவர்னர் நடத்திக் கொண்டுள்ளார். தற்போது அமலாக்க துறையும் சேர்ந்துள்ளதால் தேர்தல் பிரசாரம் எங்களுக்கு சுலபமாக இருக்கும். இதெல்லாம் சர்வ சாதாரணம். மக்களை திசை திருப்புவதற்கான நாடகம் என்று முதல்வர் ஸ்டாலின் கூறினார்.