திருவண்ணாமலை மாவட்டம் வேங்கிக்கால் பகுதியை சேர்ந்தவர் ராஜேந்திரன்(60). இவர் கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள அரியலூர் பகுதி துணை மின் நிலையத்தில் இளம் பொறியாளராக வேலை பார்க்கிறார். வருகிற ஏப்ரல் 30-ஆம் தேதி ராஜேந்திரன் பணி நிறைவு பெற உள்ளார்.

இதனால் ஓய்வு கால பணப்பலன் கேட்டு பொறியாளர் அலுவலகத்தில் விண்ணப்பித்துள்ளார். அலுவலகத்தின் மேற்பார்வையாளராக வேலை பார்க்கும் செந்தில்குமார்(50) என்பவர் பண பலன்கள் தொடர்பான ஆவணங்களை உயர் அதிகாரிகளுக்கு அனுப்ப வேண்டும் என்றால் ரூபாய் 10 ஆயிரம் லஞ்சம் தர வேண்டும் கேட்டுள்ளார்.

ஆனால் லஞ்சம் கொடுக்க விரும்பாத ராஜேந்திரன் இது குறித்து லஞ்ச ஒழிப்புத்துறை போலீசாரிடம் புகார் அளித்துள்ளார். இதனையடுத்து லஞ்ச ஒழிப்பு போலீசார் அறிவுரையின்படி ரசாயனம் தடவிய பணத்தை ராஜேந்திரன் பொறியாளர் அலுவலகத்திற்கு எடுத்துச் சென்றுள்ளார்.

பின்பு அந்த பணத்தை செந்தில்குமாரிடம் கொடுக்கும் போது அங்கு மறைந்திருந்த லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் செந்திலை கையும் களவுமாக பிடித்தனர்.  செந்தில்குமமாரை கைது செய்த போலீசார் அவரிடம் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.