இந்தியாவில் ஒரே நாடு ஒரே தேர்தல் முறையை அறிமுகப்படுத்த மத்திய பாஜக அரசு தீவிரம் காட்டி வரும் நிலையில் இதற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் வழங்கியதால் நாடாளுமன்றத்தில் விரைவில் மசோதா தாக்கல் செய்யப்பட உள்ளது. ஆனால் இதற்கு எதிர்கட்சிகள் கடும் கண்டனங்களை தெரிவித்து வரும் நிலையில் ஒரே நாடு ஒரே தேர்தல் முறை என்பது ஜனநாயகத்திற்கு எதிரானது என்று கூறுகிறார்கள். அந்த வகையில் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் இந்த ஒரே நாடு ஒரே தேர்தல் திட்டத்திற்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் கூறியதாவது, ஒரே நாடு ஒரே தேர்தல் முறை என்பது இந்தியாவில் அதிபர் ஆட்சி முறையை கொண்டு வருவதற்காக தான்.

ஒரு கட்சி மட்டும் தான் ஆட்சியில் இருக்க வேண்டும். மாநிலங்களில் மற்ற கட்சிகள் ஆட்சியில் இருக்கக் கூடாது என்ற நிலையில் தான் ஒரே நாடு ஒரே தேர்தல் முறையை பாஜக கொண்டு வர முயல்கிறது என்று கூறினார். மேலும் இன்று ஒரே நாடு ஒரே தேர்தல் மசோதா நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட இருந்ததுனில் தற்போது அது நீக்கப்பட்டுள்ளது. அதாவது இன்று தாக்கல் செய்யப்பட இருந்த மசோதா பின்னர் தாக்கல் செய்யப்படும் என்று கூறப்படுகிறது. அதாவது இன்று மசோதாவை தாக்கல் செய்தால் எதிர்க்கட்சிகள் கடும் அமளியில் ஈடுபடும் என்பதால் பாஜக அதனை தாக்கல் செய்யவில்லை எனவும், அவையின் அடுத்த வார இறுதியில் அதனை அறிமுகப்படுத்த பாஜக திட்டமிட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது. மேலும் இன்றைய தினம் அலுவல் அட்டவணையில் இருந்து அம்மசோதாக்கள் நீக்கப்பட்டு இருந்தாலும் சபாநாயகர் அனுமதியுடன் கடைசி நேரத்தில் துணை பட்டியல் மூலம் ஒரே நாடு ஒரே மசோதா திட்டம் கொண்டுவரப்படும் என்று கூறப்படுகிறது.