இந்திய ராணுவத்தின் புதிய ‌ தளபதியாக லெப்டினன்ட் ஜெனரல் திவேதி நேற்று பொறுப்பேற்றுக் கொண்டார். இவர் நாட்டின் 30-வது ராணுவ தளபதி ஆவார். இவர் ராணுவ துணை தளபதியாக இருந்த நிலையில் தற்போது புதிய ராணுவ தளபதியாக தேர்வு செய்யப்பட்டுள்ளார். இதேபோன்று கடந்த 2 மாதங்களுக்கு முன்பாக இந்திய கடற்படை தளபதியாக தினேஷ் திரிபாதி நியமிக்கப்பட்டார். இவர்கள் இருவரும் ஒரே வகுப்பில் படித்த மாணவர்கள் என்ற சுவாரஸ்ய தகவல் தற்போது வெளிவந்துள்ளது.

இந்திய வரலாற்றில் முதல்முறையாக ஒரே வகுப்பில் படித்த இருவர் ராணுவ தளபதியாகவும் கடற்படை தளபதியாகவும் ஒரே சமயத்தில் தேர்வு செய்யப்பட்டது இதுவே முதல் முறையாகும். இவர்கள் இருவரும் மத்திய பிரதேசத்தில் உள்ள ரேவா சைனிக் பள்ளியில் கடந்த 1970 ஆம் ஆண்டு 5-ம் வகுப்பில் ஒன்றாக படித்த நிலையில் அப்போதிருந்தே இருவரும் நெருங்கிய நண்பர்களாக பழகி வந்துள்ளனர். இவர்கள் இருவரும் வெவ்வேறு இடங்களுக்கு சென்றாலும் தற்போது நாட்டின் முக்கிய பொறுப்பில் பதவி வகிக்கிறார்கள். மேலும் நாட்டின் ராணுவப்படை மற்றும் கப்பற்படைக்கு வலு சேர்க்கும் விதமாக இருவரும் அமைந்துள்ளது பள்ளிக்கு பெருமை சேர்த்துள்ளதாக ஆசிரியர்கள் கூறியுள்ளனர்.