
ஜம்மு காஷ்மீர் மாநிலம் பஹல்காமில் ஏப்ரல் 22 அன்று நடந்த பயங்கரவாத தாக்குதலுக்குப் பிறகு, இந்திய அரசு பாகிஸ்தானுக்கு எதிராக பல கடுமையான நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இதில் முக்கியமாக, பாகிஸ்தானிய குடிமக்களின் விசாக்கள் ரத்து செய்யப்பட்டது மற்றும் அட்டாரி-வாகா எல்லை தற்காலிகமாக மூடப்பட்டது.
இந்திய அரசாங்கம், மருத்துவ விசா வைத்திருப்பவர்களை தவிர, அனைத்து பாகிஸ்தானியர்களும் நிர்ணயிக்கப்பட்ட காலக்கெடுவிற்குள் இந்தியாவை விட்டு வெளியேற வேண்டும் என உத்தரவு பிறப்பித்திருந்தது. சார்க் விசா வைத்திருப்பவர்களுக்கு ஏப்ரல் 26 வரை கால அவகாசம் வழங்கப்பட்டது. மற்ற அனைத்து வகை விசாக்களும் ஏப்ரல் 27 அன்று நிறுத்தப்பட்டன. மருத்துவ விசா வைத்திருப்பவர்களுக்கு மட்டும் ஏப்ரல் 29 வரை அவகாசம் வழங்கப்பட்டுள்ளது.
காலக்கெடு முடிந்த பிறகு இந்தியாவில் தங்கியிருக்கும் பாகிஸ்தான் குடிமக்கள் மீது குடியேற்றம் மற்றும் வெளிநாட்டினர் சட்டம், 2025-ன் கீழ் கடும் நடவடிக்கை எடுக்கப்படும். இதில் மூன்று ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை அல்லது ரூ.3 லட்சம் அபராதம் அல்லது இரண்டும் விதிக்கப்படும் என மத்திய அரசு எச்சரிக்கை விடுத்துள்ளது.
உள்துறை அமைச்சகம் அனைத்து மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கு கடும் அறிவுறுத்தல்களை அனுப்பியுள்ளது. மாநில முதலமைச்சர்கள், தலைமைச் செயலாளர்கள் மற்றும் காவல்துறை தலைவர்களுடன் உள்துறை அமைச்சர் அமித் ஷா நேரடி கலந்துரையாடல் நடத்தி, பாகிஸ்தானியர்களை அடையாளம் கண்டு காலக்கெடுவிற்குள் நாடு விட்டு வெளியேறச் செய்ய கடுமையான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என வலியுறுத்தினார்.
அரசாங்க வட்டாரங்களின்படி, காலக்கெடுவிற்கு பிறகு இந்தியாவில் தங்கியிருக்கும் எந்த பாகிஸ்தான் குடிமக்கள் நாடு கடத்தப்படுவார் அல்லது சிறையில் அடைக்கப்படுவார். அவர்களுக்கு விதிவிலக்கு கிடையாது என்றும், இதில் எந்தவிதமான சமரசமும் ஏற்றுக்கொள்ளப்படாது என்றும் மத்திய அரசு தெளிவுபடுத்தியுள்ளது. பஹல்காம் தாக்குதலில் பாகிஸ்தான் ஆதரவாளர்களின் தொடர்பு இருப்பதற்கான ஆதாரங்கள் முதற்கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளதாகவும் அரசு கூறியுள்ளது. மேலும் அதன்படி இன்றுடன் கால அவகாசம் நிறைவடைவதால் பாகிஸ்தானியர்கள் அனைவரும் நாட்டை விட்டு வெளியேற்றப்படுவார்கள் என்று கூறப்படுகிறது.