
இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் ரோஹித் சர்மா ஒரு சிறந்த பேட்ஸ்மேன் ஆவார். இவருக்கு தற்போது 37 வயது ஆகிறது. இதனால் ரோஹித் இந்த டி20 உலக கோப்பையுடன் ஓய்வு பெறுவார் என்று கூறப்படுகிறது. இந்நிலையில் ரோகித் சர்மா போன்ற தரமான வீரர்கள் 50 வயது வரை விளையாடலாம் என்றும் 37 வயது ஆனால் அவர்கள் கிரிக்கெட் போட்டியில் இருந்து விலக வேண்டும் என்ற கோட்பாட்டை பிசிசிஐ நீக்க வேண்டும் எனவும் முன்னாள் கிரிக்கெட் வீரரும், யுவராஜ் சிங்கின் தந்தையுமான யோக்ராஜ் சிங் தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் கூறியதாவது, ஒருவருக்கு இவ்வளவு வயதாகிவிட்டது என அவருடைய வயதைப் பற்றி பேசுவதை என்னால் புரிந்து கொள்ள முடியவில்லை. உங்களுக்கு 40, 45 வயது ஆன போதிலும் நீங்கள் பிட்டாக இருக்கிறீர்கள் என்றால் விளையாடுவதில் என்ன தவறு இருக்கிறது. ஒருவருக்கு 40 வயது ஆகிவிட்டால் அவர் அவ்வளவுதான் என மக்கள் நம்புகிறார்கள். ஆனால் அதை ஏற்றுக் கொள்ள முடியாது. மோஹிந்தர் அமர்நாத் உலக கோப்பையை வென்ற போது அவருக்கு வயது 38. எனவே ரோகித் சர்மாவுக்கு 50 வயது ஆகும்போதும் அவர் பிட்டாக இருக்கிறார் என்றால் அவர் இந்தியாவுக்காக விளையாடுவதில் எந்த தவறும் கிடையாது என்று கூறியுள்ளார். மேலும் ரோகித் மற்றும் சேவாக் போன்ற மகத்தான வீரர்கள் பிட்னஸ் பற்றி எப்போதும் நினைத்ததில்லை என்றும் கூறியுள்ளார்.