
இலங்கை அதிபர் ரணில் விக்கிரமசிங்கே, இந்தியாவுக்கு கச்சத்தீவை தர முடியாது என திட்டவட்டமாக தெரிவித்துள்ளார். கச்சத்தீவு தொடர்பான எந்தவிதமான பேச்சுவார்த்தைக்கும் இலங்கை தயாராக இல்லை என்றும் அவர் கூறியுள்ளார். மேலும், இந்தியாவுக்கு காஷ்மீர் எப்படியோ, அப்படித்தான் இலங்கைக்கு கச்சத்தீவு என்றும் வலியுறுத்தியுள்ளார்.
தமிழக அரசியல் தலைவர்கள் நீண்ட காலமாக கச்சத்தீவை இந்தியாவின் ஒரு அங்கமாக மீட்க மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி வருகின்றனர். இந்த நிலையில், இலங்கை அதிபரின் இந்தப் பேச்சு தமிழக அரசியல் வட்டாரங்களில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.
கச்சத்தீவு விவகாரம் இந்தியா மற்றும் இலங்கை இடையே நீண்ட காலமாக இருந்து வரும் ஒரு சர்ச்சைக்குரிய விவகாரமாகும். இந்திய மீனவர்கள் பாரம்பரியமாக கச்சத்தீவு பகுதியில் மீன் பிடித்து வந்த நிலையில், இலங்கை அரசு இந்தப் பகுதியை தனது கட்டுப்பாட்டில் கொண்டு வந்து இந்திய மீனவர்களை தடுத்து வந்தது. இதனால், இரு நாடுகளின் இடையே பலமுறை மோதல்கள் ஏற்பட்டுள்ளன.