காஷ்மீரில் உள்ள பஹல்காம் பகுதியில் சுற்றுலா பயணிகள் மீது தீவிரவாதிகள் நடத்திய பயங்கர தாக்குதலில் 2 வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் உட்பட 26 பேர் உயிரிழந்தனர். இந்த சம்பவத்திற்கு உலக தலைவர்கள் பலரும் கண்டனம் தெரிவித்து வரும் நிலையில் இந்தியாவிலும் பெரும் கோபம் எழுந்துள்ளது. இந்த தாக்குதலுக்கு காரணமான தீவிரவாதிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பலரும் வலியுறுத்தி வருகின்றனர்.

இந்த தீவிரவாத தாக்குதலுக்கு பின்னால் பாகிஸ்தான் அரசு இருக்கலாம் என்று கூறப்படுவதால் பாகிஸ்தான் உடனான அனைத்து உறவுகளையும் இந்தியா நிறுத்திவிட்டது. அதன்படி இந்தியாவில் உள்ள பாகிஸ்தான் நாட்டவர்கள் உடனடியாக நாட்டை விட்டு வெளியேற வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளதோடு விசாவும் ரத்து செய்யப்பட்டுள்ளது. அதன் பின்பு சிந்து நதிநீர் ஒப்பந்தத்தையும் இந்தியா ரத்து செய்துவிட்டது. இதன் காரணமாக பாகிஸ்தானுக்கு தற்போது சிந்து நதிநீர் நிறுத்தப்பட்டது.

இந்த உத்தரவுகளின் எதிரொலியாக பாகிஸ்தான் அரசும் இந்தியாவுடன்னான சிம்லா ஒப்பந்தம் உட்பட அனைத்து ஒப்பந்தங்களையும் ரத்து செய்வதாக அறிவித்துள்ளதோடு ராணுவத்தை தயார் நிலையில் இருக்குமாறு உத்தரவிட்டுள்ளது. இதன் காரணமாக பாகிஸ்தான் மற்றும் இந்தியா எல்லையில் பதற்றம் நிலவும் நிலையில் போர் ஏற்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில் தற்போது பாகிஸ்தான் நாட்டின் துணை பிரதமரும் வெளியுறவுத்துறை அமைச்சருமான இஷாக் தர் இந்த விவகாரம் குறித்து  செய்தியாளர்களை சந்தித்து பேசியுள்ளார். அவர் பேசியதாவது, இந்த விவகாரத்தில் இந்தியா பழி போடுகிறது. ஆதாரம் இருந்தால் காண்பிக்கட்டும். நாங்கள் தற்காப்புக்காக தான் தயார் நிலையில் இருக்கிறோம். எங்கள் மீது மீண்டும் ஒருமுறை இந்தியா பழி போட்டு விளையாடுகிறது. மேலும் இந்த தீவிரவாத தாக்குதலுக்கு பின்பு பாகிஸ்தான் இருந்தால் அந்த ஆதாரத்தை உலகிற்கு இந்தியா காட்டட்டும் என்று கூறினார்.