
ஜம்மு-காஷ்மீரின் பஹல்காமில் நடந்த பயங்கரவாத தாக்குதலுக்குப் பிறகு, இந்தியாவின் அடுத்த நடவடிக்கையை உலகம் ஆவலுடன் எதிர்நோக்கியுள்ள நிலையில், பாகிஸ்தான் பாதுகாப்பு அமைச்சர் கவாஜா முகமது ஆசிப் ஒரு முக்கியமான அறிக்கையை வெளியிட்டுள்ளார். அந்த அறிக்கையில் “தற்போது உடனடியான சூழ்நிலையால் நாங்கள் எங்கள் படைகளை பலப்படுத்தியுள்ளோம். சில முக்கிய முடிவுகளும் எடுக்கப்பட்டுள்ளன” என அவர் ராய்ட்டர்ஸ் நிறுவனத்துக்கு தெரிவித்தார். இந்தியாவின் தாக்குதல் சாத்தியம் குறித்து பாகிஸ்தான் இராணுவம் அரசாங்கத்திற்கு முன்கூட்டியே எச்சரிக்கை அளித்ததாகவும், பாகிஸ்தான் மிகுந்த எச்சரிக்கையுடன் இருப்பதாகவும் அவர் கூறினார். “நமது இருப்புக்கு நேரடி அச்சுறுத்தல் ஏற்பட்டால்தான் பாகிஸ்தான் தனது அணு ஆயுதங்களைப் பயன்படுத்தும்” என்றார் கவாஜா ஆசிப்.
இதேநேரம், பாகிஸ்தானின் பயங்கரவாத ஆதரவு வரலாறு மீண்டும் சர்ச்சைக்குள்ளாகியுள்ளது. ஸ்கை நியூஸுக்கு அளித்த பேட்டியில், கடந்த மூன்று தசாப்தங்களில் அமெரிக்கா மற்றும் பிரிட்டன் உட்பட மேற்கத்திய நாடுகளின் ஆதரவுடன் பயங்கரவாத குழுக்களுக்கு பாகிஸ்தான் உதவி வழங்கியுள்ளதாக ஆசிப் ஒப்புக்கொண்டார். இதற்கிடையில், பஹல்காம் தாக்குதலுக்குப் பிறகு பாதுகாப்பு நிலைமையை மதிப்பீடு செய்யும் வகையில் பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்து ஆலோசனை மேற்கொண்டார். இந்தியா எல்லை பகுதிகளில் பாதுகாப்பை தீவிரமாக்கி, விரைவான பதிலடி நடவடிக்கையை பரிசீலிக்கத் மத்திய அரசு தொடங்கியுள்ளது.
மேலும் பஹல்காம் தாக்குதலில் தங்களுக்கு தொடர்பு இல்லை என்று பாகிஸ்தான் கூறினாலும் எல்லைகளில் ராணுவத்தை குறித்து வைத்துள்ளதால் பதற்றமான நிலை நிலவுகிறது. இதன் காரணமாக இந்திய ராணுவமும் எல்லையில் படைகளை குவித்து வைத்துள்ளது. இதன் காரணமாக தற்போது போர் நிலவும் அபாயம் ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.